மாபியாக் குழுக்களினால் இந்த அரசாங்கம் நிர்வாகம் செய்யப்பட்டு வருவதாக ஜே.வி.பி கட்சி அறிவித்துள்ளது. கடந்த காலங்களில் போதைப் பொருள் வர்த்தகர்கள், மதுபான உற்பத்தியாளர்கள் மற்றும் சூதாட்டக் காரர்கள் அரசாங்கங்களுக்கு ஆதரவளித்து வந்தனர் என ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை சுங்கத் திணைக்கத்திளத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மிகவும் சொற்ப அளவிலான போதைப் பொருட்களையும், எதனோல் திரவத்தையுமே கைப்பற்றியுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். பாரியளவிலான ஹெரோயின் உள்ளிட்ட போதைப் பொருட்களை அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் நாட்டுக்குள் கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் பாதுகாப்பின் கீழ் இருக்கும் இந்த நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது நடைமுறைச் சாத்தியமற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அண்மையில் பாரிய போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய நபருக்கு எதிரான வழக்கு விசாரணைகளை சட்ட மா அதிபர் திணைக்களம் திடீரென வாபஸ் பெற்றுக்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
சட்ட மா அதிபர் திணைக்களம் ஜனாதிபதியின் அதிகாரத்திற்கு உட்பட்டதாக அமைந்துள்ளமை, திணைக்களத்தின் சுயாதீனத்தன்மைக்கு பாதக நிலைமையை ஏற்படுத்தும் என அனுரகுமார திஸாhநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
















