ஜில்லா படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வரும்நிலையில் ஐந்து தயாரிப்பாளர்களுக்கு தலா 5 லட்சம் பணம் கொடுத்து பப்ளிசிட்டி ஸ்டன்ட் அடித்த விஜய்யை, அவரது உள்நோக்கத்தை புரிந்து கொள்ளாமல் வெவரமில்லாதவர்கள் ஒருவேளை பாராட்டக் கூடும்.
வெளியே தெரியாமல் எத்தனையோ பேருக்கு, எத்தனையோ லட்சங்களை அள்ளிக் கொடுக்கும் பிரகாஷ்ராஜ் போன்ற ரியல் ஹீரோக்கள் தாங்கள் செய்யும் உதவிகளை வெளியே சொல்லிக் கொள்வதில்லை. ரசிகர் மன்றத்தின் பெயரில் போஸ்டர் அடித்து ஒட்டிக் கொள்வதுமில்லை.
அவர்கள் செய்த, செய்து கொண்டிருக்கும் உதவிகளோடு ஒப்பிட்டால், விஜய் கொடுத்த 25 லட்சம் எல்லாம் ஒன்றுமே இல்லை. ஜுஜூபி..!
பிரகாஷ்ராஜ் மட்டுமல்ல, அவரைப்போலவே வாழும் வள்ளல்களாக வேறுசில ஹீரோக்களும் கோடம்பாக்கத்தில் இருக்கிறார்கள் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?
அவர்களில் முக்கியமானவர்..விமல்.
60 லட்சம் பற்றாக்குறையாகி, ஜன்னல் ஓரம் படத்தையே ரிலீஸ் பண்ண முடியாமல் அப்படத்தின் தயாரிப்பாளர் பரிதவித்து நின்றார்.
அதை அறிந்து, கேரளாவில் இருந்த அப்படத்தின் ஹீரோக்களில் ஒருவரான விமல், அங்கிருந்தபடியே 60 லட்சத்தை ஏற்பாடு செய்து அந்தத் தயாரிப்பாளருக்குக் கொடுத்தார்.
அதுமட்டுமல்ல, அடுத்த ஃபிளைட்டைப் பிடித்து, சில மணி நேரங்களில் சென்னை வந்தார். அந்தத் தயாரிப்பாளருக்கு பக்கபலமாக நின்று படத்தை வெளியிடும் முயற்சியில் இறங்கினார்.
அப்போது மற்றொரு தகவலும் விமலிடம் சொல்லப்பட்டது. அதாவது அந்தப் படத்தின் சென்னை விநியோகஸ்தர் கடைசி நேரத்தில் கழன்று கொண்டுவிட்டார். சென்னையில் படம் ரிலீஸ் ஆகவில்லை என்றால்…படம் ரிலீஸ் ஆனதே வெளியே தெரியாமல்போய்விடும். அதோடு, படத்துக்கும் அது மிகப்பெரிய மைனஸாகி விடும் என்று சொன்னார் தயாரிப்பாளர்.
அதைக் கேட்ட விமல், மேலும் 25 லட்சத்தை கடன் வாங்கி, அந்தத் தயாரிப்பாளரிடம் கொடுத்தார். சென்னையிலும் அந்தப் படம் வெளிவர பேருதவி புரிந்தார்.
இத்தனைக்கும் அந்தப் படத்தில் நடிக்க, விமல் வாங்கிய சம்பளமே 60 லட்சம்தான்.
வாங்கிய சம்பளத்தை அப்படியே திருப்பிக் கொடுத்தது மட்டுமல்ல, கூடுதலாக 25 லட்சத்தையும் கொடுத்து அந்தப் படத்தின் தயாரிப்பாளரைக் காப்பாற்றினார்.
விமல் மட்டும் அன்று உதவி செய்யவில்லை என்றால் ஜன்னல் ஓரம் படம் அன்றைக்கு ரிலீஸாகி இருக்காது.
இத்தனை உதவிகளையும் செய்துவிட்டு, தான் பணம் கொடுத்து உதவியதை யார்கிட்டேயும் சொல்ல வேண்டாம் என்று கூறிவிட்டு சென்றிருக்கிறார் விமல்.
இப்ப சொல்லுங்க…ரியல் ஹீரோ யார்? விஜய்யா? விமலா?
















