யாழ்.இந்து மாணவனின் கொலைக்கு நீதி வேண்டும்; மாணவர்கள் நேற்று போராட்டம்

Yathusan2கொலை செய்யப்பட்ட யாழ். இந்துக் கல்லூரி மாணவன் ஜதுசனின் மரணத்திற்கு நீதி கோரி யாழ்.மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கவனவீர்ப்புப் போராட்டம் நேற்றுத் திங்கட்கிழமை (23.12.13) காலை இடம்பெற்றது.

யாழ்.கச்சேரி கிழக்கு ஒழுங்கையிலுள்ள, தேசிய இளைஞர் சேவைகள் மன்ற யாழ். மாவட்டக் காரியாலத்துக்கு முன்பாக இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில் சுமார் நூறுக்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் கலந்து கொண்டனர்.

இளைஞர்களே எதிர்காலத் தூண்கள்; அவர்களை அழிக்காதீர்கள், வன்முறைகளூடாக இளைஞர்களின் எதிர்காலத்தை நசுக்காதே, இளைஞர்கள் மீதான வன்முறையினை நிறுத்து, வருங்கால விருட்சங்களைக் கருக்காதே போன்ற சுலோகங்களைத் தாங்கி இவர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாகப் பேரணியான்று நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த போதும் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற தலைமைக் காரியாலயம் மற்றும் பாதுகாப்புத் தரப்பினரின் அனுமதியின்மை காரணமாகப் பின்னர் அது கவனவீர்ப்புப் போராட்டமாக நடத்தப்பட்டது.

இந்தக் கவனவீர்ப்புப் போராட்டத்தில் மாவட்ட இளைஞர் கழக சம்மேளன நிர்வாகசபை உறுப்பினர்கள், பிரதேச இளைஞர் கழக சம்மேளனங்களின் பிரதிநிதிகள், தேசிய சம்மேளனப் பிரதிநிதிகள், இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

கவனவீர்ப்புப் போராட்டத்தின் நிறைவில், இளைஞர் விவகார திறன்கள் அபிவிருத்தி அமைச்சரூடாக ஜனாதிபதிக்கும் மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சருக்கும், வடக்கு மாகாண இளைஞர் விவகார அமைச்சருக்கும், மனு அனுப்பி வைக்கப்பட்டது.

Tags: , , ,

Leave a Reply