பல்கலைக்கழகத்திற்கு தகுதியானோரில் வடக்கு வரலாற்றுச் சாதனை ஜனாதிபதி மஹிந்த வாழ்த்து

northern_map‘வரலாற்றில் முதற் தடவையாக இம்முறை அதிகூடிய மாணவர்கள் பல்கலைக் கழகத்துக்குத் தகுதி பெற்ற மாகாணமாக வடக்கு மாகாணம் திகழ்கின்றது. இன்று வடக்குப் பிள்ளைகள் கல்வியில் முன்னிலை வகிக்கின்றனர்’ என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச புகழாரம் சூட்டியுள்ளார்.

‘வடக்குப் பிள்ளைகள் இன்று கல்வியில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளமை கல்வித்துறைக்கு கிடைத்த பெருவெற்றியாகும்’ என கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன நேற்று தெரிவித்தார்.

2013ஆம் ஆண்டு ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் நேற்று ஜனாதிபதி மஹிந்த ரஜபக்சவை சந்தித்தனர்.

அலரிமாளிகையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் கல்வியமைச்சர் பந்துல குணவர்தன, கல்விப் பிரதியமைச்சர் மொஹான் லால்குறே, மக்கள் வங்கியின் தலைவர், ஜனாதிபதி செயற்பாட்டுக் குழுவின் முக்கியஸ்த்தர் காமினி செனரத், கல்வியமைச்சின் செயலாளர் அநுர திஸாநாயக்க, கல்லூரி அதிபர்கள், குறித்த பிள்ளைகளின் பெற்றோர் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். இதன்போது கருத்து வெளியிடுகையிலேயே கல்வியமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

தெற்கிலுள்ள பாடசாலைகளுக்கு வழங்கப்படுவது போல் வடக்கு பாடசாலைகளுக்கும் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதன் பிரதிபலனாக இன்று அந்தப் பிள்ளைகள் ஏனைய பிரதேசங்களுக்குச் சமாந்தரமாக கல்வித்துறையில் விசேட திறன்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர் என்றும் கல்வியமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கருத்துத் தெரிவிக்கையில், ‘கொடூர தீவிரவாதத்தை இல்லா தொழித்து வடக்குக்கு சமாதானத்தைப் பெற்றுக் கொடுத்ததால் அதன் பிரதிபலனாக இன்று வடக்குப் பிள்ளைகள் கல்வியில் முன்னிலை வகிக்கின்றனர். வரலாற்றில் முதற் தடவையாக ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகத்துக்கு அதிகூடிய மாணவர்கள் தெரிவான மாகாணமாக இம்முறை வடக்கு மாகாணம் திகழ்கின்றது – எனத் தெரிவித்துள்ளார்.

Tags: , ,

Leave a Reply