ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பெயரைப்பயன்படுத்தி யானைக்குட்டி பெற்றுத்தருவதாக கூறி ரூபா 33 இலட்சம் நிதி மோசடியில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரிடம் மாட்டிக்கொண்டார்.
பொலிஸ் விஷேட விசாரணைப் பிரிவுக்குக் கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றையடுத்து மேற்கொள்ளப்பட்ட விரிவான விசாரணைக்குப் பின்னரே தலவத்துகொட பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரை விஷேட விசாரணை பிரிவினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஊடாக மியன்மாரிலிருந்து விலை மதிப்பு மிக்க யானைக்குட்டிகளை பெற்றுத் தருவதாகக் கூறி சந்தேக நபர் மினுவாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த டி. சி. ராஜபக்ஷ என்பவரிடம் இருந்து சுமார் 33 இலட்சம் ரூபா பணத்தை மோசடியாகப் பெற்றுள்ளார்.
யானைக் குட்டி ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக பணம் கொடுத்த நபருக்கு பணம் பெற்றுக் கொண்ட நபர் தொடர்பில் ஏற்பட்ட சந்தேகத்தையடுத்து அவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
மேற்படி முறைப்பாடு தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வந்த விஷேட விசாரணைப்பிரிவு பொலிஸார் தலவத்துகொட பிரதேசத்தைச் சேர்ந்த மஹிந்த கலப்பத்தி என்பவரை மடக்கிப்பிடித்துள்ளனர்.
சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலம் யானைக்குட்டி பெற்றுத்தருவதாகக் கூறி மோசடியாக பணம் பெற்றுக் கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சந்தேக நபர் யானைக்குட்டி பெற்றுத் தருவதாகக் கோரி அதுபோன்று வேறு எவரிடமாவது பண மோசடி செய்துள்ளாரா என்பது தொடர்பான விசாரணைகளையும் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினர் ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
















