இந்தியாவை இலங்கை மிரட்டுகிறது: – பழ.நெடுமாறன் குற்றச்சாட்டு!

கன்னியாகுமரியில் நாம் துறைமுகம் அமைக்கக்கூடாது என இந்தியாவை இலங்கை மிரட்டுவதாக நாகர்கோவிலில் பழ.நெடுமாறன் தெரிவித்தார்.துறைமுகம் தொடர்பாக பேசிய பழ.நெடுமாறன்நாகர்கோவிலில் நடந்த கன்னியாகுமரி வளர்ச்சி இயக்கக் கூட்டத்தில் கலந்துகொண்ட பழ.நெடுமாறன் கோவளம் பகுதியில் அமைய உள்ள வர்த்தக துறைமுகத்துக்கு ஆதரவாகப் பேசினார். முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

“உலகத்தில் உள்ள மிக முக்கியமான கடல்வழியில் பசிபிக் மற்றும் அண்டார்ட்டிக்கா கடல் வழிகள். இவற்றைவிட இந்தியப் பெருங்கடல் மிக முக்கியமானது. சீனா, ஜப்பான் போன்ற நாடுகளுக்குப் போகும் கப்பல்கள் இந்த வழியில் செல்கின்றன. இந்தக் கடல் வழியில் எந்த முக்கிய துறைமுகமும் இல்லை.

சென்னை, விசாகப்பட்டினம், மும்பை, கொச்சி ஆகிய மற்ற துறைமுகங்கள் இந்தக் கடல்வழியை விட்டு விலகி இருக்கின்றன. சர்வதேச சரக்கு கப்பல்கள் அந்தத் துறைமுகங்களுக்குச் செல்வதில்லை. நம் நாட்டிலிருந்து மேற்கு மற்றும் கிழக்கு நாடுகளுக்கு சரக்கு அனுப்ப கொழும்பு அல்லது சிங்கப்பூர் துறைமுகங்களுக்குச் சின்ன கப்பலில் அனுப்பி அங்கிருந்து பெரிய கப்பல்களில் மாற்றி அனுப்ப வேண்டி இருக்கிறது. இதனால் நம் நாட்டுக்கு ஒரு ஆண்டில் 1,500 கோடி ரூபாய் செலவாகிறது. தமிழகம் தொழில் வளர்ச்சியில் மூன்றாவது இடத்தில் உள்ளது, இன்னும் வேகமாக வளர்ந்து வருகிறது. ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் வசதிக்காகத் தமிழகத்தில் துறைமுகம் இல்லை. 16 மீட்டர் மிதவை ஆழம் இருந்தால்தான் பெரிய சரக்கு கப்பல்கள் வரமுடியும். அதற்கேற்ற ஆழம் குமரி கடல் பகுதிகளில் உள்ளது.

கோவளம் முதல் மணக்குடி வரையிலான பகுதியில் 20 மீட்டர் மிதவை ஆழம் இருக்கிறது. இதன்மூலம் நம் சரக்குகளை உடனடியாக சர்வதேச நாடுகளுக்கு அனுப்ப முடியும். சர்வதேச கடல் வழிக்கு அருகில் இந்தத் துறைமுகம் அமைய இருக்கிறது. இந்தத் துறைமுகத்தை அமைக்க விடாமல் இலங்கை அரசு தடுக்கிறது. நேரு பிரதமராக இருந்தபோதே அப்போதைய இலங்கை பிரதமர் இங்கு துறைமுகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தார். துறைமுகம் அமைத்தால் கொழும்பு துறைமுகத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என அவர் சொன்னதால், அந்தத் திட்டத்தை ஒத்தி வைத்தார்கள். இப்போதும் நாம் துறைமுகம் அமைக்கக் கூடாது என இலங்கை இந்தப் பிரச்னைக்கு அழுத்தம் கொடுத்துக்கொண்டே இருக்கிறது. இந்தியாவை மிரட்டுவதற்காக கொழும்பு துறைமுகத்தில் அமைக்கும் ஐந்தாவது கட்டத்தை சீனாவுக்குக் கொடுப்போம் எனக் கூறுகிறார்கள். அப்படி சீனா துறைமுகம் அமைத்தால் இந்தியாவுக்கு ஆபத்து. கொழும்பு துறைமுக ஐந்தாவது கட்டத்தை அமைக்க இந்தியாவுக்கு அனுமதி வழங்கவேண்டுமானால் கன்னியாகுமரியில் துறைமுகம் அமைக்கக் கூடாது என அழுத்தம் கொடுக்கிறார்கள்.

கேரள மாநிலமும் அவர்களது துறைமுகத்துக்குப் பாதிப்பு ஏற்படும் என்பதால் குமரி மாவட்டத்தில் துறைமுகம் அமைவதை விரும்பவில்லை. துறைமுகம் அமைப்பது பா.ஜ.க. அரசா வேறு அரசா என பார்க்காமல் தமிழக வளர்ச்சிக்குத் தேவை என அனைவரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும். துறைமுகத்துக்கு எதிராக போராடுபவர்கள் குறித்து நான் கருத்துக் கூற விரும்பவில்லை. ஜனநாயக நாட்டில் எல்லோருக்கும் எல்லா உரிமையும் உண்டு” என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!