ஜெனிவா இராஜதந்திரச் சமரை எதிர்கொள்வதற்கு இரட்டை வியூகம் வகுத்துள்ள இலங்கை அரசு, அங்கத்துவ நாடுகளின் ஆதரவைத் திரட்டுவதற்கான காய்நகர்த்தல்களிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இதற்காக அமைச்சர்கள் மட்டத்திலான தூதுக்குழுக்களை வெளிநாடுகளில் களமிறக்கி இராஜதந்திர சந்திப்புகளை நடத்த திட்டமிட்டுள்ள அரசு, இதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தமது வெளிநாட்டுத் தூதர்களுக்கும் பணிப்புரை விடுத்துள்ளது.
அரசின் இந்த இரட்டை வியூகத்தின் ஓரங்கமாக ஜனவரி நடுப்பகுதியில் இலத்தீன் அமெரிக்கா, கரீபியன் நாடுகள், ஆபிரிக்கா, அரபு நாடுகளுக்குச் செல்லும் அமைச்சர்கள் அந்த நாட்டு வெளிவிவகாரக் குழுவினருடன் முக்கிய சந்திப்புகளை நடத்தி இலங்கையின் தற்போதைய நிலவரங்களை தெளிவுபடுத்தவுள்ளனர் என்று நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.
அத்துடன் ஜெனிவாவிலும் கொழும்பிலும் இது குறித்த இராஜதந்திரக் கூட்டங்களை நடத்தவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இறுதிக்கட்டப் போரில் இடம் பெற்ற மனித உரிமைகள் மீறல் தொடர்பிலும் நம்பகமான உள்ளக விசாரணையை எதிர்வரும் மார்ச் மாதத்துக்கு முன்னர் நடத்தப்படாவிட்டால், சர்வதேச விசாரணையை இலங்கை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரும், பிரிட்டன் பிரதமரும் இலங்கையை எச்சரித்திருந்தனர்.
இந்த முறை ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டுவரவுள்ள பிரேரணைக்கு பிட்டனும் கூட்டு அதரவு தெரிவிக்க உள்ளதால் இலங்கைக்கு நெருக்கடி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்தகைய பிரேரணை மூலம் சர்வதேச விசாரணை ஒன்றை எதிர்கொள்ளாமல் தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை இப்பொழுதே முன்னெடுக்கத் தொடங்கியுள்ளது.
குறிப்பாக போர்க்கால இழப்பீடு தொடர்பில் முன்னெடுக்கப்படும் மதிப்பீடு, காணாமற்போனோர் தொடர்பில் ஆராய்வதற்கான குழு, அமையவுள்ள உண்மையைக் கண்டறியும் குழு, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரை நடைமுறைப்படுத்தப்பட்ட விதம், வடமா காணசபைத் தேர்தல், மீள்குடியேற்றம் உட்பட பல்வேறு விடயங்களை இந்நாடுகளுக்குத் தெளிவுபடுத்தி அவற்றின் நல்லபிப்பிராயத்தைப் பெறுவதே அரசின் வியூகமாக இருக்கின்றது.
இந்நிலையில், அமைச்சர்கள் மட்டத்திலான தூதுக்குழு வெளிநாடு செல்லவுள்ளமை தொடர்பில் வெளிநாட்டலுவல்கள் பிரதியமைச்சர் நியோமல் பெரேராவிடம் வினவியபோது, “நாம் தற்போதும் எமது நாட்டு நிலைவரம் தொடர்பில் வெளிநாடுகளுக்குத் தெரியப்படுத்தி வருகின்றோம்.
நாம் என்னதான் செய்தாலும் அவற்றுக்கு மாறுபட்ட கருத்துகளையே புலம்பெயர் அமைப்புகள் முன்னெடுக்கின்றன. எனவே, உண்மை நிலைவரங்களை நேரில் விளக்குவதற்கு அமைச்சர்கள் மட்ட தூதுக்குழுவை வெளிநாடுகளுகுகு அனுப்பும் எதிர்பார்ப்பு அரசிடம் இருக்கின்றது” என்று பதிலளித்தார்.
அதேவேளை, இரட்டை வியூகத்தின் மற்றுமொரு அங்கமாக கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு நாட்டின் உண்மை நிலைவரத்தைத் தெளிவுபடுத்தும் செயற்பாட்டை வெளிவிவகார அமைச்சு முன்னெடுத்து வருகின்றது.
மேற்கூறப்பட்ட விடயங்கள் சம்பந்தமாகவே இவர்களுக்கும் தெளிவுபடுத்தப்படுகின்றது. இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி கருணாதிலக அமுனுகமவிடம் வினவியபோது, நாட்டின் நிலைவரம் சம்பந்தமாக நாம் இராஜதந்திரிகளுக்கு மாதாந்தம் தெளிவுபடுத்தல்களை மேற்கொள்வது வழமையயன கூறிய அவர், எதிர்காலத்திலும் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
பிரிட்டனின் காலக்கெடு விதித்துள்ளதால் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 25 ஆவது கூட்டத்தொடரில் சர்வதேச விசாரணைப் பொறிமுறை வலியுறுத்தப்படலாம் என்ற அச்சத்தால் அவற்றைத் தடுக்கும் முகமாகவே அரசு இவ்வாறான வியூகம் வகுத்துள்ளது எனக் கூறப்படுகின்றது.
ஆனால், இதுதொடர்பில் அரசின் உத்தியோகபூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. ஜெனிவாத் தொடரை இலக்குவைத்தே அரசு பல குழுக்களை புதிதாக அமைத்துள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஐந்து ஆபிரிக்க
நாடுகளுக்கு வலை
ஜெனிவாவில் கடந்த முறை இலங்கை விவகாரம் தொடர்பில் அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணைக்கு ஆதரவையோ எதிர்ப்பையோ வெளியிடாமல் நடுநிலை வகித்த எட்டு நாடுகளுள் அங்கோலா, பொட்ஸுவானா, பேர்க்கினாபசோ, செனகல் ஆகிய ஐந்து நாடுகள் ஆபிரிக்க நாடுகளாகும்.
எனவே, இம்முறை பிரேரணை ஏதாவது வந்தால் அதை எதிர்க்குமாறு கோரிக்கை விடுக்கும் நோக்கிலும், இலங்கைக்கு நல்லிணக்கத்தை நோக்கிப் பயணிப்பதற்கு மேலும் கால அவகாசம் தேவையயன மனிதவுரிமைகள் பேரவையில் கோரிக்கை விடுக்குமாறும் வேண்டுகோள் விடுக்கும் நோக்கிலுமே ஆபிரிக்க நாடுகளுடன் அரசு நெருங்கிய உறவைப் பேணிவருகிறது என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அரபுநாடுகள்
இதற்கிடையில், அரபுநாடுகளைப் பொறுத்தமட்டில் சவூதி, கட்டார், குவைத் போன்ற நாடுகள் அமெரிக்க சார்புடைய நாடுகளாக இருந்தபோதிலும் கடந்தமுறை இலங்கைக்கு ஆதரவாகச் செயற்பட்டன. மலேசியா, ஜோர்தான் ஆகிய நாடுகள் மதில்மேல் பூனைபோல் நடுநிலை வகித்தன.
எனினும், இலங்கையில் தற்போது முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டதால் இலங்கைக்கு எதிராக இம்முறை அரபுலகம் திரும்பக் கூடிய அபாயம் இருக்கின்றது. எனவே இவற்றின் ஆதரவை உறுதிப்படுத்தவேண்டிய தேவைப்பாடு அரசுக்கு இருக்கின்றது. இதன் நிமித்தமே அரபுலகுடன் பேச்சுகள் இடம்பெறவுள்ளன.
மேற்படி நாடுகளுக்குச் செல்லும் அமைச்சர்கள் குழாமில் முஸ்லிம் அமைச்சர்கள் பலரும் இடம்பெறவுள்ளனர். மேலும் லத்தீன் அமெரிக்க நாடுகளைப் பொறுத்தமட்டில் கியூபா, ஈக்குவடோர் ஆகிய நாடுகளைத் தவிர மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் ஏனைய லத்தீன் அமெரிக்க நாடுகள் இலங்கைக்குச் சார்பான போக்குக் கொண்டவையல்ல. மனித உரிமைப் பேரவையில் 47 அங்கத்துவ ஆசனங்களில் 8 இடங்கள் லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் நாடுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த நாடுகளுக்கு இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நல்லிணக்க நடைமுறைகளை விளங்கப்படுத்துவதன் மூலம் அவற்றை தனக்கு சார்பான நிலை எடுக்க வைக்கவே இந்த இராஜதந்திர நகர்வுகளை இலங்கை மேற்கொள்ளவுள்ளது.
















