சர்வதேச மட்டத்தில் இலங்கை அரசுக்கு எதிராக ஏற்பட்டுள்ள அபாயநிலைமையை அமைச்சரவைக்கும் நாட்டு மக்களுக்கும் தெரியப்படுத்தாமல் அவற்றை வெளிவிவகார அமைச்சர் மூடி மறைக்கின்றார் என்று பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை எதிர்வரும் மார்ச்சில் ஜெனிவாத் தொடரில் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கை இலங்கை அரசுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் என அக்கட்சியின் தலைமைத்துவ சபை உறுப்பினரும் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல சுட்டிக் காட்டினார்.
ஜெனிவாத் தொடரில் இலங்கை அரசுக்கு எதிராக ஏற்படும் சவால்கள் மற்றும் நவநீதம்பிள்ளை சமர்ப்பிக்கவுள்ள அறிக்கை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதேவேளை, இந்தியாவின் ஆளும் காங்கிரஸ் அரசுடன் சுமுக உறவைப் பேண முடியாமல் இருக்கும் இலங்கை அரசுக்கு பா.ஜ.க.ஆட்சிக்கு வந்தால் அழுத்தங்கள் அதிகரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சர்வதேச தரத்திலான சுயாதீன விசாரணைப் பொறி முறையொன்று வகுக்கப்படும் என்று உறுதியளித்து ஐ.நா.செயலருடன் இணைந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 2009 இல் கூட்டறிக்கையொன்றை விடுத்திருந்தார். ஆனால் அந்த உறுதிமொழி இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.
தேசிய இனப்பிரச்சினைக்கு 13ஆவது அரசமைப்புக்கு அப்பால் செல்வதாகவும் அவர் கூறியிருந்தார். அதுவும் இன்னமும் நிறைவேறவில்லை. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.
எனவே, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை சமர்ப்பிக்கவுள்ள அறிக்கை அரசுக்கு எதிரான தாகவே இருக்கும். இது அனைவருக்கும் தெரியும்.
ஏனெனில், உலகுக்கும் மனித உரிமைகள் சபைக்கும் வழங்கிய உறுதிமொழிகளை அரசு இன்னமும் நிறைவேற்றவில்லை என்றும் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை சமர்ப்பிக்கவுள்ள அறிக்கை அரசுக்கு எதிரானதாகவே இருக்கும்.
















