சுற்றுலா வீஸாவில் இலங்கை வந்து பாதுகாப்புடன் தொடர்புடைய தளங்களை படம் பிடித்தார் என்ற குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட தமிழகத்தை சேர்ந்த மகாதமிழ் பிரபாகரன் கொழும்பிலுள்ள பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரின் கட்டுப்பாட்டில் தடுத்து வைக்கப்பட்டு தொடர்ந்தும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
வீஸா விதி முறைகளை மீறி செயற்பட்டமை, நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடைய தளங்களை படம் எடுத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டின் கீழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 24 வயதான மகாதமிழ் பிரபாகரன் கொழும்புக்கு அழைத்து வரப்பட்ட நிலையிலேயே பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் வெளியாகும் விபரங்களுக்கு அமைவாக அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.
கைது செய்யப்பட்டுள்ள நபரை நாடுகடத்துவது குறித்தான எந்த தீர்மானமும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எந்த ஒரு நடவடிக்கையாயினும் உள் நாட்டு சட்ட திட்டங்களுக்கு அமைவாக மேற்கொள்ளப் படும் என குறிப்பிட்டார்.
கைது செய்யப்பட்டுள்ள மகா தமிழ் பிரபாகரனிடமிருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ள நான்கு கமராக்களில் இராணுவ நிலைகள் மற்றும் பாதுகாப்புடன் தொடர்புடைய படங்களே காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந் நிலையில் சுற்றுலா விஸாவில் இலங்கைக்குள் வந்த ஒருவர் எதற்காக நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடைய புகைப்படங்களை எடுக்க வேண்டும் என விசாரணை செய்து வரும் பொலிஸார் மகா தமிழ் பிரபாகரன் மீதான விசாரணைகளில் வெளிப்படுத்தப்படவிருக்கும் தகவல்களுக்கு அமைவாக அடுத்த கட்ட நடவடிக்கை யினை மேற்கொள்ளவுள்ளனர்.
கிளிநொச்சி வேரவில் பகுதியில் வைத்து கடந்த புதுன்கிழமை இவர் கைது செய்யப்பட்டிருந்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர், வட மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை ஆகியோருடன் இவர் பயணம் செய்திருந்தபோதே படையினராலும் பொலிஸாராலும் இவர்கைது செய்யப்பட்டிருந்தார்.
இவர் தமிழகத்திலிருந்து வெளிவரும் ஜூனியர் விகடன் சஞ்சிகையில் சுயாதீன ஊடகவியலாளராகப் பணியாற்றி வருவதாகவும் தெரிவிக்கப் படுகின்றது.
















