காணாமற்போனோர் தொடர்பில் வடக்கு மக்களிடம் சாட்சியங்களைத் திரட்டுவதற்காக காணாமற்போனோர் பற்றி விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு எதிர்வரும் ஜனவரியில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களுக்குப் பயணம் செய்யவுள்ளது. மூவரடங்கிய இந்தக் குழுவுடன் சட்டமா அதிபர் திணைக்களத்தின் விசாரணைக்குழுவொன்றும் அங்கு செல்லவுள்ளது.
காணாமற்போனோர் பற்றி விசாரணை நடத்தும் ஆணைக்குழுவின் தலைவராகச் செயற்படும் மெக்ஸ்வெல் பராக்கிரம பரணகமவின் பேச்சாளராகச் செயற்படும் அதிகாரியொருவர் இந்தத் தகவலை நேற்று “உதய’னிடம் உறுதிப்படுத்தினார்.
ஜனவரி 15ஆம் திகதியளவில் வடக்குப் பயணத்தை ஆரம் பிக்கும் இந்தக் குழு 5 மாவட்டங்களிலும் மக்கள் அமர்வுகளை (Public sittings) நடத்திக் காணாமற்போனோர்களின் உறவினர்களிடம் தகவல்களைப் பெறவுள்ளது.
காணாமற்போனோர்களின் உறவினர்கள் அல்லது அவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் இந்த அமர்வுகளில் பங்கேற்று ஆணைக்குழுவிடம் தகவல்களை வழங்கமுடியும் என்றும் அந்த அதிகாரி “உதய’னிடம் தெரிவித்தார்.
அதேவேளை, காணாமற்போனோர் தொடர்பில் இதுவரை எழுத்து மூலம் 11ஆயிரம் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன என்றும் இவை தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.
வடக்கு மாகாணத்தில் தகவல்களைத் திரட்டிய பின்னர் இந்தக் குழு கிழக்கு மாகாணத்துக்கும் செல்லவுள்ளது. பெப்ரவரி மாதமளவில் கிழக்கு பயணம் அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன், எதிர்வரும் பெப்ரவரி 15ஆம் திகதியுடன் இக்குழுவின் ஆயுட்காலம் முடிவடைவதால் அதை மேலும் ஆறு மாதங்களுக்கு நீடிக்குமாறு காணாமற்போனோர் தொடர்பிலான ஆணைக்குழு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
போர்க் காலத்தில் வடக்கு, கிழக்கில் காணாமற்போ னோர் தொடர்பில் விசாரணை செய்வதற்காக ஜனாதிபதி யால் நியமிக்கப்பட்டுள்ள இந்த ஆணைக்குழுவுக்கு புலனாய்வு செய்வதற்கான அதிகாரமும் வழங்கப்பட்டுளளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி 15ஆம் திகதியளவில் வடக்குப் பயணத்தை ஆரம்பிக்கும் இந்தக் குழு 5 மாவட்டங்களிலும் மக்கள் அமர்வுகளை (Public sittings) நடத்தி காணாமற்போனோர்களின் உறவினர்களிடம் தகவல்களைப் பெறவுள்ளது.
















