அமெரிக்க உயர்குழு வடக்குக்கும் பயணம்; தமிழ்க் கூட்டமைப்புடனும் பேச்சு நடத்தும்

Nisha_Biswalஇலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் நிஷாதேசாய் பிஸ்வால் தலைமையிலான அமெரிக்க உயர்மட்ட இராஜதந்திரிகள் குழு வடபகுதிக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளது என்று அறியமுடிகின்றது.

அத்துடன், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், மனித உரிமை விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் விசேட தூதுவரும் ஜெனிவா குழுத்தலைவருமான அமைச்சர் மஹிந்த சமரசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருடனும் குறித்த குழு பேச்சு நடத்தவுள்ளது.

அமெரிக்க உயர்மட்ட இராஜதந்திரக் குழுவின் இலங்கைப் பயணத்தை கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகமும் இலங்கை வெளிவிவகார அமைச்சும் நேற்று “உதயனி’டம் உறுதிப்படுத்தின.

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர், நிஷாதேசாய் பிஸ்வால் தலைமையிலான அமெரிக்க தூதுக்குழு ஜனவரியில் என்ன நாளில் இலங்கை வருகின்றது? யார், யாரை அந்தக்குழு இங்கு சந்திக்கும்? வடபகுதிக்குச் செல்லுமா என்று கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்திடம் “உதயன்’ வினவியபோது,

“இவை தொடர்பில் தற்போது அறிக்கையிடுவதற்கு ஒன்றுமில்லை. எனினும், இராஜாங்கக் குழுவின் இலங்கைப் பயணம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்களை நிராகரிப்பதற்குமில்லை” என்று தூதரகத்தின் சார்பில் பேசவல்ல அதிகாரியொருவர் கூறினார்.

அதேவேளை, அமெரிக்கக் குழுவின் இலங்கைப் பயணம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி கருணாதிலக்க அமுனுகமவிடம் “உதயன்’ வினவிய போது, இலங்கை வருவதற்கு அமெரிக்கக்குழு கோரிக்கை விடுத்துள்ளது என்பதை மட்டுமே தற்போது கூறமுடியும் என்று பதிலளித்தார்.

இதற்கிடையில் அமெரிக்கக் குழு இலங்கை வந்தால் நிச்சயம் கூட்டமைப்பைச் சந்திக்கும் என்று அதன் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் “உதயனி’டம் நேற்று தெரிவித்தார்.

வடக்குக்குச் செல்லும் அமெரிக்கக் குழு வடமாகாண முதல்வர் மற்றும் அரச அதிபர்களைச் சந்திக்கும் என்றும், மீள்குடியேற்றக் கிராமங்களுக்குச் செல்லும் என்றும் தகவல்கள் வெளியிட்டிருந்தாலும் இதை இன்னும் அமெரிக்கா உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கக் குழுவின் இலங்கைப் பயணம் ஜனவரி இரண்டாம் வாரத்தில் இடம்பெறும் எனத் தகவல்கள் வெளியிட்டிருந்தாலும் ஜனவரி 22ஆம் திகதியே குறித்த குழு இங்கு வரும் எனக் கூறப்படுகின்றது. ஆனால், இது தொடர்பில் இன்னும் உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க உயர் மட்டக்குழு கடந்த மார்ச் மாதம் ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டுவந்து நிறைவேற்றிய இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு அமைய நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து மதிப்பீடுகளை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் பயணத்தின் அடிப்படையில் வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு எதிரான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அமெரிக்க இராஜாங்கத் திணைக் களம் முடிவுசெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மையில் அமெரிக்க காங்கிரஸின் உயர்நிலைக் குழுவொன்றும் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டு ஜெனிவா தீர்மானத்துக்குப் பிந்திய நிலைமைகள் குறித்து மதிப்பீடுகளைச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: ,

Leave a Reply