வடமாகாணசபை அமைக்கப்பட்டு மூன்று மாதங்கள் கடந்துள்ளபோதிலும் ஆளுநர் – முதலமைச்சர் – மாகாண செயலாளர் ஆகியோருக்கு இடையிலான முறுகல் நிலை முடிவுக்கு வராத சூழ்நிலை காணப்படுகிறது.
இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின் நடந்த தேர்தலில் தமிழ் மக்களின் பெருத்த எதிர்பார்ப்புகளுடன் வடமாகாணத்தில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த முறுகல்நிலை காரணமாகத் தனது பணியைச் செவ்வனே மேற்கொள்ளமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரப் பரவல், மாகாணசபைகள் என்று பெரிய அளவில் பேசப்பட்டு வரும் இன்றைய சூழ்நிலையில், இவையயல்லாம் வெறும் பேச்சளவில்தான் என்பதை வடமாகாணத்தில் இடம் பெறும் சம்பவங்கள் நிரூபிக்கின்றன.
அரசின் பிரதிநிதியாகச் செயற்படும் பலம் பொருந்திய ஆளுநர், ஆளுநரின் செல்வாக்குக்கு மட்டுமே உட்பட்ட மாகாண செயலாளர் ஆகியோர் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மாகாணசபையின் நடவடிக்கைகளுக்கு இடைஞ்சலாக இருந்து வருகின்றனர். முன்னாள் இராணுவ அதிகாரியான ஆளுநரை இடமாற்றம் செய்வதன் மூலம் இப்பிரச்சினைக்கு தற்காலிகமாகத் தீர்வு காணமுடியும்.
யாழ்.மாவட்ட பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்கவை இடமாற்றம் செய்யும் அரச தரப்பு, மக்களால் தெரிவுசெய்யப்பட்ட சபை நிர்வாகத்துடன் முரண்பட்டுக்கொண்டிருக்கும் ஆளுநரை தொடர்ந்து பதவியில் வைத்திருக்க முனைகிறது.
ஆளுநருக்கும் முதலமைச்சருக்குமிடையிலான முரண்பாடுகள் தீருவதற்கான அறிகுறி இதுவரை தென்படவில்லை. அது நாளொரு மேனியும் ,பொழுதொரு வண்ணமுமாக ஊதிப் பெருத்து வருகிறது. இது எந்த வகையிலும் ஏற்புடையதல்லவே.
இத்தகைய இருள்சூழ்ந்த நிலையில், வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவுக்குமிடையிலான சந்திப்பு ஒன்று எதிர்வரும் தினங்களில் நடைபெறவிருப்பதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்தச் சந்திப்பின் பின்னர் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஜனாதிபதியைச் சந்திக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசமைப்பில் மாற்றம் செய்வது தொடர்பான தெரிவுக்குழுவில் இடம்பெறப்போவதில்லை என்று அறிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அரசின் அறிவுறுத்தலின் பேரில் புள்ளி விவரவியல் திணைக்களத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ள போர் இழப்பீடுகள், சொத்து இழப்பீடுகள் தொடர்பான கணக்கெடுப்பையும் நிராகரித்து தனது கடுமையான போக்கை வெளிப்படுத்தியுள்ளது.
கூட்டமைப்பின் அதிகாரத்தின் கீழுள்ள வடமாகாணசபை, அரசுடன் முரண்படுவது அரசுக்கு இருக்கப்போகிறது. அரசின் மிதவாதமும் உள்ளூறிய இனவாதமும், இனப்பிரச்சினையை நீறுபூத்த நெருப்பாகி விடுமோ என்ற வினாவையும் நீட்டி உயர்த்தி நிற்கிறது. கடந்த காலங்களில் வேண்டாத மோதல்களையும் போராட்டங்களையும் கண்ட வடக்கில் முரண்பாடுகள் காரணமாக அமைதிக்கான வாய்ப்புகள் அருகி வருவது, கண்ணுக்கு எட்டக்கூடிய தூரத்தில் தெரிகிறது அல்லவா? இத்தகைய நிலைமையை அனுமதிப்பது தீவிரவாதத்துக்கும் பிரிவினைவாதத்துக்குமே வழிவகுக்கும் என்பது அரச மேதாவிகளுக்குத் தெரியாதா?
வடமாகாணத்துக்கான தேர்தல் குறித்த அறிவிப்பை தேர்தல்கள் ஆணையாளர் விடுத்தபோது, கூட்டமைப்பின் வெற்றி அரசால் எதிர்பார்க்கப்பட்டதுதான். ஆனால் கூட்டமைப்பின் ஆளுகையின் கீழ் உள்ள ஒரு மாகாணசபை எப்படிச் செயற்படும் என்பதை அரசதரப்பு கருத்தில் கொள்ளத் தவறிவிட்டது.
வடமாகாணசபை தவிர நாட்டிலுள்ள ஏனைய எட்டு மாகாணசபைகளும் ஆளுநர் ஒருவர் இருக்கிறார் என்பது கூடத் தெரியாத நிலையில் சுமுகமாக இயங்கிக்கொண்டிருக்கின்றன. வட மாகாணசபை சுயமாக இயங்க முடியாது ஏற்பட்டுள்ள முரண்பாடுகளால் ஆளுநர் முதலமைச்சர் விவகாரம் நாளாந்தம் ஊடகங்களில் பிரதான இடத்தைப் பிடித்து வருகிறது. முதலமைச்சருக்கும் ஆளுநருக்கும் இடையிலான முரண்பாடு இரு தனி நபர்களுக்கிடையிலான முரண்பாடு அல்ல.
மத்திய அரசுக்கும் மாகாண நிர்வாகத்துக்கும் இடையிலான முரண்பாடு. இதனை அனைத்துலகமும் உன்னிப்பாக அவதானிக்க வேண்டிய அவசரமும் அவசியமும் உண்டு.
மக்கள் தமது வாக்குப் பலம் கொண்டு தெரிவுசெய்த சபை இயங்கும்போது இராணுவ அதிகாரி ஒருவர் எப்படி ஆளுநராக இருக்கமுடியும்? தற்போதைய நெருக்கடிகளுக்கெல்லாம் அடிப்படைக் காரணம் அதுவே என்பதனை உணராது அரசு செயற்படுவது ஏன்? இது திட்டமிட்ட நிர்வாகச் சதி அன்றி வேறல்ல.
வடக்கில் தேர்தலை நடத்தினால் மட்டும் போதாது. தேர்தலை நடத்திவிட்டு, மாகாணசபையின் சுயாதீனமான செயற்பாட்டுக்குத் தடங்கல் விளைவிப்பதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. வடமாகாணசபை கலைக்கப்படவேண்டும், கூட்ட மைப்பு தடைசெய்யப்படவேண்டும் என்று பேரினவாதிகள் கூச்சல் போடுகிறார்கள். பிரச்சினைகள், முரண்பாடுகள் வளருவது இனவாதிகளுக்கே தீனியாகிறது. முரண்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவந்து வடமாகாணசபை சுயாதீனமாக இயங்க அனுமதிப்பது அரசின் பொறுப்பு.
















