ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு மற்றுமொரு பிரேரணை கொண்டு வரப்படும் நிலையில் அரசாங்கம் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் காயங்களை ஆற்றாமல் மேலும் காயங்களை உருவாக்கவே முயற்சித்து வருகின்றது என ஜே.வி.பி. குற்றம் சாட்டியுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டினை பிரசாரச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித்த ஹேரத் முன்வைத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் 25 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் மனித உரிமைப் பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக புதிய யோசனை அமெரிக்கா கொண்டு வரலாம் என்ற அச்சமும் காணப்படுகின்றது.
இந்நிலையில் இவ்வாறான நிலைமை ஒன்றை அரசாங்கமே உருவாக்கிக் கொண்டு வருகின்றது. நாட்டில் மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்தி யுத்தத்தினால் ஏற்பட்ட காயங்களை ஆற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தால் சர்வதேச அழுத்தங்களை தடுத்திருக்கலாம்.
ஆனால், அரசாங்கம் மனிதஉரிமை நிலைமையை மேம்படுத்துவதிலோ காயங்களை ஆற்றுவதிலோ முன்னேற்றத்தை காட்டவில்லை. மாறாக யுத்தத்தினால் ஏற்பட்ட காயங்களை ஆற்றுவதற்கு பதிலாக புதிதாக காயங்களை உருவாக்கிக் கொண்டுவருகின்றது.
அந்தவகையில் பார்க்கும்போது இவ்வாறானதொரு நிலைமையை அரசாங்கமே உருவாக்கிக் கொண்டுள்ளது என்று கூறலாம்.
எனினும் தற்போதும் கூட நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை. மனிதஉரிமை மீறல்கள் விடயத்தில் முன்னேற்றம் ஏற்படுத்தப்படவில்லை.
எனவே சர்வதேச அழுத்தங்கள் வருவதற்கான அனர்த்தம் அதிகமாகவே காணப்படுகின்றது. இருப்பினும் எதிர்வரும் மார்ச் மாதத்துக்கு முன்னர் நாட்டின் மனித உரிமை நிலைமையில் முன்னேற்றத்தை வெளிப்படுத்த நடவடிக்கை எடுத்தால் சர்வதேச அழுத்தங்களிலிருந்து தப்பிக்க முடியும்.
ஆனால் அரசாங்கம் அவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று அவர் மேலும் குற்றம்சாட்டியுள்ளார்.
















