“இலங்கை இனப் பிரச்சினையை தீர்ப்பதற்காக ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் கூட்டத் தொடரில் அரசு அளித்த வாக்குறுதிகளையும், இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளையும் சர்வதேசம் ஒரு போதும் மறந்து விடாது.
அங்கு கொண்டுவரப்பட்ட பிரேரணையை அரசு அலட்சியப் படுத்துமானால் சூடானிலிருந்து தென்சூடான் பிரிந்த நிலையே இலங்கைக்கும் ஏற்படும்.
எனவே, பிரச்சினைகளைத் தீர்க்க சர்வதேசத்துடன் அரசு பேச வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் தலைமைத்துவச் சபை உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியயல்ல தெரிவித்துள்ளார்.
சிறிகொத்தவில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற விசேட ஊடகவிய லாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரி வித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:
போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள கடந்த 5 வருட காலப்பகுதியில் ஐக்கிய நாடுகள் சபைக்கும், சர்வதேசத் துக்கும் அரசு பல வாக்குறுதிகளை அளித்துள்ளது. 13ஆவது திருத்தத்தை நடைமுறைப் படுத்துவது மட்டுமல்ல, அதற் கப்பால் சென்று 13 பிளஸ் வழங்கவும் தயார் என்றும் கூறியது. இந்த வாக்குறுதி களை பொது நலவாய அமைப் பிடமும் அரசு அளித்துள்ளது.
இருப்பினும், கடந்த நான் கரை வருடங்களில் நல்லிணக்க ஆணைக் குழு அறிக்கைப் பரிந்துரைகளைக் கூட அரசு முழுமையாக நடை முறைப்படுத்தவில்லை. குறிப்பாக, சுயாதீன ஆணைக் குழுக்களை நிறுவுமாறும், தகவல் அறியும் உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் கூட்டமொன்றைக் கொண்டு வரவேண்டும் என்றும், தடுத்து வைக்கப்பட்டுள்ளோர், காணாமற்போனோர், கொல்லப்பட்டோர் தொடர்பிலான பெயர்ப்பட்டியலை வெளியிடவேண்டும் என்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்தப் பரிந்துரைகளை அரசு நடைமுறைப் படுத்தவில்லை. அதுமட்டுமல்லாது, சர்வதேசத்திற்கும் ஐ.நாவுக்கும் அளித்த எழுத்து, வாய் மூல வாக்குறுதிகளையும் அது நிறை வேற்றவில்லை.
தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதென்பது ஒரு சிக்கலான விடயமே அல்ல. ஆனால், அரசுதான் அதை சிக்கல் தன்மையானதாக மாற்றிக்கொண்டது. இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு சர்வதேசத் துக்கு அளித்த உறுதிமொழிகளை அரசு நிறைவேற்றி இருந்தால், இலங்கையிலும் பிரச்சினை இல்லை. சர்வதேசத்திலும் பிரச்சினை இல்லை. பிரச்சினை முடிந்திருக்கும்.
தேர்தல்கால மேடைகளில் வழங்கும் வாக்குறுதிகளைப்போல, தாம் அளித்த வாக்குறுதிகளை ஐ.நாவும் சர்வதேசமும் மறந்துவிடும் என்று அரசு எண்ணிக் கொண்டிருக்கிறது.
5 அல்ல இன்னும் 10, 15, 20 வருடங்கள் சென்றாலும் இலங்கை அரசு தமக்கு அளித்த உறுதிமொழிகளையும், தமிழ் மக்களின் இனப்பிரச்சினையையும் சர்வதேசம் ஒருபோதும் மறக்காது.
எனவே, இனப்பிரச்சினையை சர்வதேசத்துடன் பேசித் தீர்க்க வேண்டும். இதற்காக 13ஆவது திருத்தத்தை மட்டுமல்ல, அதற்கப்பால் செல்வதற்கும் நாம் எதிர்ப்புத் தெரிவிக்கமாட்டோம்.
நாடு இருக்குமா என்பது சந்தேகம்
நாம் தற்போது தீர்க்கமான நிலையில் இருக்கின்றோம். அடுத்த சில வருடங்களில் நாடு இருக்குமா என்பது சந்தேகம். ஏனெனில், சர்வதேசத்தால்தான் தற்போது நாடுகள் உருவாக்கப்படுகின்றன. கிழக்குத் திமோர், தென் சூடான் முதலான நாடுகள் இவ்வாறுதான் உருவாக்கப்பட்டன.
கிழக்குத் திமோர், இந்தோனே´யாவிலிருந்து பிரிந்து வேறொரு நாடாகியுள்ளது. இந்தோனே´யாவுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் சிறியதொரு பிரேரணைதான் கொண்டுவரப்பட்டது. பின்னர் அது பெரிதாகி கிழக்குத் திமோர் என்ற ஒரு நாட்டையே உருவாக்கியது. சூடானும் அதுபோலதான்.
சூடானுக்கு எதிராகவும் ஐ.நாவில் சிறியதொரு பிரேரணைதான் கொண்டுவரப்பட்டது. பின்னர் அது பெரிதாகி தென் சூடான் என்ற புதிய நாட்டையே உருவாக்கியது. மேற்படி இரு நாடுகளுக்கும் எதிராக ஐ.நாவில் கொண்டுவரப்பட்ட பிரேரணைகளை இரு நாட்டு அரசுகளும் கருத்திற்கொள்ளவில்லை. அதுபோலத்தான் எமது நாட்டு அரசும் செயற்படுகிறது.
இலங்கைக்கு முதன் முதலில் ஐ.நாவை அறிமுகப்படுத்தியவர் யார்? தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்தான். அவர்தான் ஐ.நாவுக்கு முதன் முதலில் சென்றார். 1971ஆம் ஆண்டில் கலவரம் ஏற்பட்டபோது எவரும் ஐ.நாவுக்குப் போகவில்லை. 1989ஆம் ஆண்டு இடம்பெற்ற கலவரத்தின் பின்னர்தான் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஐ.நாவுக்கு முதன் முதலாகச் சென்றார். எனவே, அரசு இப்போது எம்மை ஏசுவதில் பயனில்லை. சர்வதேசத்துடன்தான் பேசவேண்டும். என்றார்.
















