முல்லைத்தீவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்ததனியார் பஸ் மீது மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சுத் தாக்குதலில் மூவர் காயமடைந்துள்ளனர்.
இந்த பஸ் வண்டி நேற்று புதன்கிழமை பிற்பகல் விஸ்வமடுப் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்தபோதே கல்வீச்சுத் தாக்குதலுக்கு உள்ளானது. மோட்டார் சைக்கிளொன்றில் வந்த இருவர் கல்வீச்சுத் தாக்குதலை மேற்கொண்டு விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக தெரியவருகின்றது.
மேலும், இந்தக் கல்வீச்சுத் தாக்குதலின்போது பஸ் வண்டியின் கண்ணாடிகள் உடைந்துள்ளன. இந்த பஸ் வண்டியில் பயணித்த மூவரே காயமடைந்துள்ளனர்.
காயமடைந்துள்ள மூவரும் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் பெண்ணொருவர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
















