இராஜதந்திர, தூதரக மட்டங்களில் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளது நாடு; ஐ.தே.க. தலைமைத்துவ சபைத் தலைவர் கரு தெரிவிப்பு

Karu-Jeyasureeyaஇலங்கை இராஜதந்திர மற்றும் தூதரக மட்டத்தில் பொருத்தமானவர்களைப் பதவிக்கு அமர்த்தாத காரணத்தால் இரு துறைகளும் பெரும் பாதிப்பை எதிர்நோக்கி வருகின்றன.

அரசு, ஊரிலுள்ள சண்டியர்களைப் போலச் செயற்பட்டு சர்வதேசத்துடன் தொடர்புகளைப் பேணமுடியாது. சர்வதேச தரத்துக்குக்கமையவே செயற்பட வேண்டும் என ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினரும் தலைமைத்துவ சபைத் தலைவருமான கருஜயசூரிய தெரிவித்தார்.

மேல் மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளருக்குப் பலரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதால் முதலமைச்சர் வேட்பாளராக யாரை நியமிப்பது? முதலமைச்சர் வேட்பாளரை அறிவிப்பதா? இல்லையா? என்பது குறித்து தலைமைத்துவ சபை ஆராய்ந்து வருகின்றது என்றும் தெரிவித்தார்.

ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தவில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு தெரிவித்த அவர், மேலும் தெரிவித்தவை வருமாறு:

நாட்டு மக்கள் மிகவும் துன்பத்திற்கு உள்ளாக்கப்பட்ட வருடம் 2013ஆம் ஆண்டுதான். அத்தியாவசியப் பொருள்களின் விலை அதிகரிப்பால் மக்கள் பெரும் துன்பப்படுகின்றனர்.

மூன்று வேளையும் உணவு உண்ணமுடியாத பல்லாயிரக்கணக்கான மக்கள் இங்குள்ளனர். அமெரிக்கா, பிரிட்டனை விட இலங்கையில் சில உணவுப் பொருள்களின் விலை அதிகம்.

சிறுவர் துஷ்பிரயோகம், போதைப்பொருள், சூதாட்ட நிலையம் உள்ளிட்ட பல விடயங்கள் நாட்டில் மலிந்து போயுள்ளன. இவற்றின் பின்னணியில் அரசின் அதிகாரம் மிக்கவர்களே இருக்கின்றனர். கசினோக்களுக்கு இடமளித்தால் துப்பாக்கி, விபசாரக் கலாசாரம்தான் நாட்டில் உருவாகும்.

சவால்களை எதிர்கொள்ள புதிய பொறிமுறை
2014 ஆம் ஆண்டில் புதிய மாற்றத்தை மக்கள் எதிர்பார்க்கின்றனர். எனவே, இந்த ஆண்டில் எமக்கெதிரான அனைத்துச் சவால்களையும் எதிர்கொள்ளப் புதிய பொறி முறையொன்றை வகுத்துச் செயற்படுகின்றோம்.

ஜனாதிபதித் தேர்தலுக்குத் தயார்
இந்த வருடத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் எனத் தகவல்களின் மூலம் அறிய முடிகின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கு நாம் தயார். இருப்பினும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதே எமது நோக்கமாகும் – என்றார்.

Tags: ,

Leave a Reply