பிரான்ஸ் நாட்டில், புத்தாண்டு உற்சாகத்தில் பங்கேற்றவர்கள், ஆயிரத்துக்கும் அதிகமான கார்களை எரித்துள்ளனர்.
பிரான்ஸ் நாட்டில், ஒவ்வொரு புத்தாண்டின் போதும், முதல் நாள் இரவு, புத்தாண்டை வரவேற்க காத்திருக்கும் இளைஞர்கள், உற்சாக மிகுதியில், சாலை ஓரங்களில் உள்ள கார்களை, தீ வைத்து கொளுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
பிரான்ஸ் அரசு இதை வன்மையாக கண்டித்து வருகிறது. இந்த ஆண்டு இது போன்ற சம்பவம் நடக்கக்கூடாது என்பதற்காக, புத்தாண்டு அன்று, 53 ஆயிரம் பொலிசார் குவிக்கப்பட்டனர்.
ஆனால், இதையும் மீறி, 1,067 கார்கள் எரிக்கப்பட்டுள்ளதாக, பிரான்ஸ் உள்துறை அமைச்சர் மானுவல் வால்ஸ் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், ´´எதிரிகளை பழி வாங்கும் நோக்கில், அவர்கள் காரை, புத்தாண்டு உற்சாகத்தை சாக்காக வைத்து எரிப்பதை, சிலர் வழக்கமாக கொண்டுள்ளனர்.
ஆனால், கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், இது போன்ற சம்பவம், இந்த ஆண்டு, 10 சதவீதம் குறைந்துள்ளது,´´ என்றார்.
















