தேர்தலின் போது ராணுவத்தை கட்டுப்படுத்த அதிகாரமில்லை; கைவிரித்தார் தேர்தல் ஆணையாளர்

thesaஇலங்கைத் தேர்தல் ஆணையாளருக்குப் போதிய அதிகாரம் வழங்கப்படவில்லை என்பதை நேற்று ஒப்புக்கொண்ட தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய, இதற்கு வடக்கு மாகாணசபைத் தேர்தலை உதாரணம் காட்டிப் பேசியுள்ளார்.

வடக்குத் தேர்தலில் இராணுவத்தின் வன்முறையைத் தடுப்பதற்கான அதிகாரம் தனக்கு வழங்கப்படவில்லை என்று அவர், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் பகிரங்கமாகக் கூறியுள்ளார்.

அத்துடன், 2014 ஆம் ஆண்டில் புதிதாக எந்தவொரு கட்சியும் பதிவு செய்யப்படமாட்டாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையாளருக்கும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்குமிடையில் முக்கிய சந்திப்பொன்று நேற்று வெள்ளிக்கிழமை தேர்தல் செயலகத்தில் நடைபெற்றது. மேல் மற்றும் தென்மாகாண சபைகள் இன்னும் சில நாள்களில் கலைக்கப்படவுள்ள நிலையிலேயே இந்தச் சந்திப்பு இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் செயற்பாடுகள், தேருநர் இடாப்பு, அரசியல் கட்சிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உட்பட மேலும் பல முக்கிய விடயங்கள் தொடர்பிலும் இச்சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.

குறிப்பாக வேட்புமனுத் தாக்கலின்போது வேட்பாளர்கள் தேசிய அடையாள அட்டையில் dபிறப்புச் சான்றிதழிலுள்ள பெயர்களையே வேட்புமனுவில் குறிப்பிடவேண்டும். இதற்கு மாறாக அகரவரிசைக்கேற்ப பெயர் முன்வரிசையில் இருக்கவேண்டும் என்பதற்காக பெயர் மாற்றங்கள் இடம்பெற்றிருந்தால் வேட்புமனுக்கல் நிராகரிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையாளர் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, தேர்தல் ஆணையாளருக்குப் போதிய அதிகாரங்கள் வழங்கப்படவில்லை என்றும், வடக்கு மாகாண சபைத் தேர்தலின்போது தேர்தல் ஆணையாளரின் பணிப்புரைகளையும் மீறி இராணுவப் புலனாய்வாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர் என்றும் இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தேர்தல் ஆணையரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்குப் பதிலளித்த அவர், இதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். இராணுவ வன்முறைகள் தொடர்பில் தமிழ்க் கூட்டமைப்பு என்னிடம் முறையிட்டபோது அது தொடர்பில் அச்சந்தர்ப்பத்தில் நான் யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதியுடன் கலந்துரையாடினேன்.

எனினும், இராணுவத்தின் வன்முறையைத் தடுப்பதற்கான அதிகாரம் எனக்கு வழங்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார். காலை 10 மணிமுதல் மதியம் 1 மணிவரை நடைபெற்ற இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.ஏ. சுமந்திரன், வடமாகாண சபை உறுப்பினர் த.சித்தார்த்தன், வீ.ஆனந்தசங்கரியும், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ஜோன் அமரதுங்கவும் ஜே.வி.பியின் சார்பில் ரில்வின் சில்வாவும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் ஹசனலியும் மலையக மக்கள் முன்னணியின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் அ.லோரன்ஸ், ஜாதிக ஹெல உறுமயவின் சார்பில் நிசாந்த ஸ்ரீவர்ணசிங்கவும், ஜனநாயக மக்கள் முன்னணியின் சார்பில் அதன் தலைவர் மனோ கணேசன், உதவிப் பொதுச்செயலாளர் சண் .குகவரதன் ஆகியோரும், ஐக்கிய சோ­லிஸக் கட்சியின் சார்பில் அதன் பொதுச்செயலர் சிறிதுங்க ஜயசூரியவும், ஈ.பி.டி.பியின் சார்பில் அதன் ஊடகப் பேச்சாளர் சி.தவராசாவும் கலந்துகொண்டனர். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் இரு பிரதிநிதிகளும் இதில் பங்கேற்றிருந்தனர்.

Tags: ,

Leave a Reply