இலங்கை கடற்படையால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. இதன்போது, இலங்கை அதிபர் ராஜபக்சவின் உருவ பொம்மையை தீவைத்து கொளுத்தினார்கள்.
இலங்கை கடற்படையால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்தும் இலங்கையில் சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க கோரியும், இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்க கோரியும், கச்சத்தீவை மீட்க கோரியும், தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தின் போது, ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உருவ பொம்மையை தீவைத்து கொளுத்தினார்கள். அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற பொலிசார் தடுத்து நிறுத்தி உருவ பொம்மையை கைப்பற்றினார்கள்.
பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் என 500க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
















