சர்வதேச போர்க்குற்ற நிபுணர் நாளை இலங்கை வருகிறார்; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் சந்தித்துப் பேசுவார்

StephenRappசர்வதேச போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் அமெரிக்காவின் விசேட தூதுவர் ஸ்ரீபன் ஜே.ராப், உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு நாளை திங்கட்கிழமை இலங்கை வருகிறார்.

எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத் தொடரின் போது இலங்கைக்கு எதிராக அமெரிக்கா, கடுமையான பிரேரணையை நிறைவேற்றவுள்ளது என எதிர்பார்க்கப்படும் நிலையில், இவர் இலங்கை வருவது இலங்கை அரச தரப்பினரை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இரண்டாவது தடவையாக இலங்கை வரும் இவர், எதிர்வரும் 11ஆம் திகதி வரை இங்கு தங்கியிருப்பார் என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவரின் வருகையை இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகமவும் நேற்று “உதய’னிடம் உறுதிப்படுத்தினார்.

ஸ்ரீபன் ஜே ராப், இந்தப் பயணத்தின் போது அரச உயர் அதிகாரிகள், எதிர்க்கட்சியினர், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், நீதித் துறையினர் உள்ளிட்ட பலரைச் சந்தித்துப் பேச்சு நடத்துவார் எனவும், இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று நிலைமைகளை நேரடியாக ஆராய்வார் என்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.

போர்க்குற்றங்களுக்குத் தண்டனை விதித்தல் மற்றும் மோதல்களுக்குப் பின்னரான இலங்கையின் நிலை, இன நல்லிணக்கம் மற்றும் அதற்கான முன்னெடுப்புக்கள் தொடர்பில் இந்தப் பயணத்தின் போது ஸ்ரீபன் அதிக கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, இலங்கை வரும் ஸ்டீபன் ஜே ரெப், கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்துப் பேச்சு நடத்துவார் என்றும், அவர் வடக்கு சென்று இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் வாழும் மக்களுடனும், இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுடனும் கலந்துரையாடுவார் என்றும் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

கடந்த வருடம் பெப்ரவரி மாதம் முதல் தடவையாக இலங்கை வந்த ஸ்டீபன் ஜே ரெப், இரா.சம்பந்தன் எம்.பி. தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பினரைக் கொழும்பில் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags: ,

Leave a Reply