ஈரான் எண்ணெய் இறக்குமதி: இலங்கைக்கு அமெரிக்கா தடை

usa-flag2ஈரான் மீதான சில தடைகளை அண்மையில் விலக்கியுள்ள போதிலும், அந்த நாட்டிடம் இருந்து இலங்கை மசகு எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாது என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக இலங்கை அரசுக்கு அமெரிக்கா அறிவித்துள்ளதாக இலங்கையின் பெற்றோலிய வளங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துடன் பல சுற்றுப் பேச்சுகள் நடத்தப்பட்டுள்ளதாகவும், வொசிங்டனில் உள்ள இலங்கைத் தூதரகமும், அமெரிக்க அரசுடன் பேச்சுகளை நடத்தியதாகவும், பெற்றோலியத்துறை அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.

இந்தப் பேச்சுக்களின் போதே, ஈரான் மீதான சில தடைகளை விலக்க உலகத் தலைவர்கள் இணங்கிய போதிலும், எண்ணெய் இறக்குமதி மீதான தடைகள் இன்னமும் தொடர்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஈரானிய மசகு எண்ணெயை மட்டுமே சுத்திகரிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள, சப்புகஸ்கந்தை சுத்திகரிப்பு ஆலையைக் கொண்டுள்ள இலங்கையின் எண்ணெய் சுத்திகரிப்புக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அரசு கூறியுள்ளது.

இலங்கை தனது எண்ணெய் பயன்பாட்டில் 93 சதவீதத்தை ஈரானிடம் இருந்தே பெற்று வந்தது. அணுசக்தித் திட்டத்தை நிறுத்தி வைக்க ஈரான் வாக்குறுதி அளித்ததை அடுத்து ஈரான் மீதான தடைகள் சிலவற்றை விலக்க அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முடிவு செய்திருந்தன.

இதனால் தம் மீதான எண்ணெய் இறக்குமதி தடை நீங்கும் என்று கருதியிருந்த இலங்கைக்கு அமெரிக்காவின் இந்த முடிவு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

Tags: , , ,

Leave a Reply