லயன் எயார் விமானத்தில் பயணித்தவர்களை அடையாளம் காட்டுங்கள்; உதவி கோருகிறது பொலிஸ்

lion-airதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படும் ‘லயன் எயார் விமானத்திலிருந்து மீட்கப்பட்ட ஆடைகளை காட்சிப்படுத்தி உயிரிழந்தவர்கள் தொடர்பில் கண்டறிவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதற்கமைய, எதிர்வரும் 11ஆம் திகதி மற்றும் 12ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் இந்த ஆடைகள் காட்சிப்படுத்தப்படவுள்ளன என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.

இதன்போது 72 ஆடைகள், அடையாளம் காண்பதற்காக காட்சிப்படுத்தப்படவுள்ளன.

கடந்த 14 வருடத்திற்கு முன் 1998ஆம் ஆண்டு செப்டெம்பர் 29ஆம் திகதி சுட்டு வீழ்த்தப்பட்டதாக நம்பப்படும் லயன் எயார் விமானத்தில் உயரிழந்த பயணிகளின் உறவினர்கள் அல்லது அவர்கள் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் குறித்த இரு தினங்களில் வருகை தந்து உயிரிழந்தவர்கள் தொடர்பில் தகவல் வழங்குமாறு பொலிஸ் தலைமையகம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் குறித்த விமானத்தின் நொருங்கிய பகுதிகளில் கடந்த மே மாதம் வடபகுதி கடற்பரப்பின் இரணைத்தீவுக்கு அண்மையில் கடலுக்கு அடியிலிருந்து மீட்கப்பட்டன.

அதன்படி விமானத்தின் என்ஜின், மோட்டர் மற்றும் விமானத்தின் பின்புறப் பகுதிகள், உயிரிழந்தவர்களின் எலும்புக்கூடுகள், ஆடைகள் போன்றன மீட்கப்பட்டுள்ளன.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஏவுகணைத் தாக்குதலில் இந்த விமானம் வீழ்த்தப்பட்டதாக நம்பப்படுகின்றது. இருப்பினும், இதன் மர்மம் இன்னும் பூரணமாகத் துலங்காத நிலையில் மேற்படி விமானத்தின் பாகங்களை கடற்படையினர் கண்டுபிடித்துள்ளர்.

Tags: , ,

Leave a Reply