இந்திய – இலங்கை உடன்படிக்கை மதிக்கப்படவேண்டும். அதேவேளை, இலங்கை அரசமைப்பில் கொண்டு வரப்பட்ட 13ஆவது திருத்தத்தையும் இலங்கை அரசு முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என இந்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
புதுடில்லியில் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்´த் கபார் தெற்காசிய நிறுவனத்துக்குத் தாம் அளித்துள்ள பேட்டியில் இதனை வலியுறுத்தியுள்ளார்.
13ஆவது திருத்தம், இலங்கையில் தமிழர்களும் இதர சிறுபான்மையினரும் உரிமையோடும் கெளரவத்தோடும் வாழ வழியமைக்கிறது. இக்கூற்றை இந்தியா உறுதிப்படுத்துகிறது என்றும் குர்´த் தமது பேட்டியில் விளக்கியுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது:
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியுடன் செய்து கொள்ளப்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்தம் மதிக்கப்படவேண்டுமென்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. இது விடயத்தில் இலங்கை அரசு எமது உதவியைக் கோரியுள்ளது.
“இது தொடர்பாக நாம் அளித்துள்ள பதிலில், இந்தியாவில் நடைமுறையில் உள்ளது போல் மத்தியில் குவிந்துள்ள அதிகாரம் மாநிலங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படவேண்டுமென்பதை வலியுறுத்தியுள்ளோம்.
“இலங்கை ஓர் இறையாண்மை படைத்த நாடு. ஆகவே, இலங்கையரே தம் நாட்டைப்பற்றி முடிவெடுக்கவேண்டியவர்கள். அதேவேளை, 13ஆவது திருத்தச்சட்டம் இலங்கையின் பெரும்பான்மையினர், தமிழர்கள், இதர இனங்களைச் சேர்ந்தோர் ஆகியோர் உரிமையோடும் கெளரவத்தோடும் வாழ வழிசமைக்கும் என எங்களுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது” – என்றார்.
அதேவேளை, 13ஆவது திருத்தச்சட்டம் குறித்தும் அரசமைப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய இதர தேவையான மாற்றங்கள் குறித்தும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவே முடிவெடுக்கும் என இலங்கை அரசு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
















