இறுதிக்கட்ட போரின் போது இரசாயனக் குண்டுகளையோ அல்லது கொத்துக் குண்டுகளையோ எதிரிகள் மீதான தாக்குதலுக்குப் படையினர் பயன்படுத்தவில்லை என்று அறிவித்துள்ள இலங்கை இராணுவம், இது தொடர்பில் மன்னார் மற்றும் யாழ். ஆயர்கள் வெளியிட்டுள்ள கருத்துகள் அடிப்படையற்றவை என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
இறுதிக்கட்டப் போர் நடைபெற்ற பகுதியில் தடைசெய்யப்பட்ட கொத்துக் குண்டு, இரசாயனக் குண்டு, விமானக் குண்டுத் தாக்குதல்களைப் படையினர் நடத்தியதால் தமக்குப் பேரழிவுகள் ஏற்பட்டன என்று மக்கள் தம்மிடம் தெரிவித்துள்ளனர் என்று சர்வதேச போர்க்குற்ற விவகாரங்களைக் கையாளும் அமெரிக்கத் தூதுவர் ஸ்ரீபன் ராப்பிடம் மன்னார் ஆயரும் யாழ். ஆயரும் நேற்றுமுன்தினம் கூட்டாகத் தெரிவித்திருந்தனர்.
இது தொடர்பில் நேற்று “உதயனி’டம் கருத்து வெளியிடு கையிட்ட இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய மேற்கண்டவாறு கூறினார்.
“புலம்பெயர் அடிப்படைவாதக் குழுக்களின் போலித் தகவல்களை வைத்துக்கொண்டே இவ்விரண்டு ஆயர்களும் போர் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளனர். இவர்களின் கூற்று எமக்குக் கவலையளிக்கின்றது.
இறுதியுத்தத்தில் மட்டுமல்ல, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கை இராணுவம் தடை செய்யப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தவில்லை. சம்பிரதாயங்களுக்கு உட்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தியே எதிரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
யு.வி.எவ்வினால் அங்கீகரிக்கப்பட்ட குண்டுகளையே விமானப்படையினர் பயன்படுத்தினர். எதிரிகளின் இருப்பிடங்களைக் குறிவைத்து மாத்திரமே தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
எனவே, இராசாயனக் குண்டுகள், கொத்துக் குண்டுகள் போன்ற தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன என்ற குற்றச்சாட்டை நாம் நிராகரிக்கின்றோம் என்றும் இராணுவப் பேச்சாளர் கூறினார்.
















