அமெரிக்க தலைமையிலான மேற்குலக நாடுகள் இலங்கைக்கு எதிராக சுயாதீன விசாரணை நடத்த வேண்டும் என்ற யோசனையை நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக, கலாநிதி தயான் ஜயதிலக்க குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் இந்த யோசனையை நிறைவேற்ற இந்த நாடுகள் முயற்சித்து வருவதாகவும், இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் இராஜதந்திரியான கலாநிதி தயான் ஜயதிலக்க அத தெரணவிடம் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது,
இதன் பாதிப்புக்களை நேற்று பார்த்தோம், இலங்கைக்கான அமெரிக்க துதரகத்தின் உத்தியோக பூர்வ ட்விட்டர் வலைத்தளத்தில். இலங்கையில் 2009ம் ஆண்டு இராணுவத்தின் செல் வீச்சால் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் கொல்லப்பட்ட இடங்களுக்கு, அமெரிக்க தூதுவர்கள் இருவர் சென்றதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் அமெரிக்க தூதரகம் இதனை முழு உலகத்திற்கும் கூறிவிட்டது. இதன் மூலம் சர்வதேச விசாரணை நடத்த போகும் முயற்சியை எம்மால் உணர்ந்து கொள்ள முடியும். சர்வதேச விசாரணை நடத்தி இலங்கை இராணுவமும் இலங்கை அரசும் மேற்கொண்ட நியாயமான போரை தலைக்கீழாக புரட்டி போட்டு, இலங்கை மீது விமர்சனங்களை முன்வைத்து குற்றவாளியாக்கவே இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது மிகவும் பயங்கரமானது.
இதற்கு முகம் கொடுக்க இலங்கை மூன்று நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். முதலில் இலங்கை அரசாங்கம் சர்வதேசம் ஏற்றுக்கொள்ளும் சுயாதீனமான விசாரணைகளை நடத்த வேண்டும். இந்த விசாரணை நடத்த நீதிபதி சீ.கிறிஸ்டி வீரமன் அல்லது டெஸ்மன் டி சில்வா என்ற மகாராணி சட்டத்தரணியை நியமித்து தேசிய ரீதியான விசாரணைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும்.
இரண்டாவது வட மாகாண சபையுடன் அரசியல் ரீதியான இணக்கத்தை ஏற்படுத்தி அந்த உண்மையை உலகிற்கு காட்ட வேண்டும். முடிந்தளவான அரசியல் இணக்கப்பாடுகளை பகிரங்கமாக ஆரம்பிக்க வேண்டும்.
மூன்றாவது நடவடிக்கையாக அரசாங்கத்தில் இருக்கும் வெளிநாட்டு கொள்கைகளை நன்கு அறிந்த அதில் நிபுணத்தும் பெற்ற சிலரை கொண்ட அமைச்சரவை குழு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பிக்கப்பட வேண்டும். கலாநிதி சரத் அமுனுகம, டியூ.குணசேகர, ரஜீவ விஜேசிங்க, வசந்த சேனாநாயக்க, மிலிந்த மொரகொட ஆகியோர் அந்த குழுவிற்கு நியமிக்கப்பட வேண்டும்.
நடந்து வரும் இந்த பனிப் போரை வெற்றி தோல்வியின்றி நிறுத்த இந்த அமைச்சரவை குழுவை ஜனாதிபதி உடனடியாக நியமிக்க வேண்டும். அத்துடன் இலங்கையின் நட்பு நாடுகளான ரஷ்யா, சீனாவுடன் ராஜதந்திர மட்டத்திலான தொடர்புகளை மேலும் வலுப்படுத்த வேண்டும். என கலாநிதி தயான் ஜயதிலக்க குறிப்பிட்டுள்ளார்.
















