பொங்கள் வெளியீடாக அஜித்தின் வீரம் மற்றும் விஜயின் ஜில்லா ஆகிய படங்கள் இன்று திரையரங்குகளை ஆக்கிரமித்துள்ளன.
நீண்ட நாளைக்கு பின் ஒரே நாளில் வெளியாகியுள்ள இளைய தளபதி மற்றும் தலயின் இந்த இரண்டு படங்களும் இரசிகர்களிடையே மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
இறுதியாக 2007ம் ஆண்டு விஜயின் போக்கிரி மற்றும் அஜித்தின் ஆழ்வார் ஆகிய இரு படங்களும் ஒரே நேரத்தில் வெளியாகியமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் படத்தை பார்த்த இரசிகர்களின் கருத்தாக தமிழக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ள சில விமர்சனங்கள்…
அஜித்தின் வீரம் படம் குறித்து பார்த்த பலரும், இது அஜித் படமில்லை.. ஹரி படம் மாதிரி பரபரவென போகிறது என பாராட்டு தெரிவித்துள்ளனர்.
படம் பார்த்த இரசிகர்களில் ஒருவர் கூறியதாவது, ´அசல், பில்லா, ஆரம்பம் என கோட்டு சட்டையோட மொரைச்சிகிட்டே திரிந்த அஜித்தை சும்மா கல கல னு வேறமாதிரி மாத்தி படத்தையும் குடும்பத்தோட பாக்கிற மாதிரி கொடுத்த ´வீரம்´ சிவாவை பாராட்டலாம்..´, என்கிறார்.
பாசக்கார அண்ணன் அஜித் விநாயகம்…. அவருக்கு மூன்று பிரதர்ஸ். அநியாயத்துக்கு எதிராக குரல் கொடுப்பதில் வீராதி வீரர்கள்.
மனைவி வந்தால் தம்பிகளைப் பிரித்து விடுவார் என்பதால் திருமணமே வேண்டாம் என தம்பிகளோடு வாழ்கிறார் அஜித்.
அண்ணனுக்கு திருமணம் நடந்தால்தான் தங்களுக்கு திருமணம் நடக்கும் என்பதால் தங்களுக்கான அண்ணியைத் தேடுகிறார்கள் தம்பிகள். எப்படித் திருமணம் நடந்தது என்பது மீதிக் கதை.
படம் பார்த்தவர்கள் சொன்ன கதை இது. படத்தில் இவருக்குத்தான் முக்கியத்துவம் என்று சொல்ல முடியாத அளவுக்கு அண்ணன் தம்பிகள் நால்வருக்கும் முக்கியத்துவம் தந்திருக்கிறார்களாம்.
படம் முழுக்க அஜித்தின் நடிப்பும் உடல் மொழியும் மிரட்டலாக உள்ளது. தமன்னா அழகு, சந்தானம் காமெடி எல்லாமாகச் சேர்ந்து பொங்கலுக்கு பக்காவான விருந்தாக இந்தப் படம் அமைந்துள்ளது என இரசிகர்கள் தெரிவித்தனர்.
அஜித்தை வைத்து ஹரி ஒரு அதிரடி படம் எடுத்திருந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது வீரம்… இதுதான் வீரம் பார்த்த இரசிகர்களின் தீர்ப்பு.
இது ஒருபுறம் இருக்க விஜய்க்கு மிக மிக முக்கிய படமான ஜில்லா இன்று எந்த தடங்கலுமின்றி வெளியாகிவிட்டது.
அவரது இரசிகர்களைப் பொறுத்தவரை இது அவர்களின் மானப் பிரச்சினை. ´இளைய தளபதி´யின் இந்தப் படத்தின் வெற்றி தோல்விதான் அவரது எதிர்கால இருப்பை நிர்ணயிக்கும் எனும் அளவுக்கு போய்விட்டது நிலைமை.
எனவே படத்தை வெற்றி பெற வைக்க என்னென்ன செய்ய வேண்டும் அவ்வளவைவும் கடந்த சில தினங்களாக செய்து வருகின்றனர்.
இரசிகர்களின் பார்வையில் படம் எப்படி?
முதல் காட்சி பார்த்த பலரும் படம் மிகவும் பொழுதுபோக்காகவும், மாஸ் என்டர்டெயினராகவும் உள்ளதாகத் தெரிவித்தனர்.
குறிப்பாக விஜய்யின் நடிப்பு பட்டையைக் கிளப்புவதாக இரசிகர்கள் பாராட்டினர். இரசிகர்கள் சொன்னதலிருந்து படத்தின் கதை,
மதுரையின் பெரிய தாதாவான மோகன்லாலிடம் விசுவாச அடியாளாக இருந்த ஒருவரை பொலிஸ் சுட்டுக் கொன்றுவிடுகிறது. அடியாளின் மகன்தான் விஜய். தனது வளர்ப்பு மகனாகவே அவரை வளர்த்து ஆளாக்கும் மோகன்லால், ஒரு கட்டத்தில் பொலிசில் தனக்கு ஒரு ஆள் வேண்டுமே என்பதற்காக, விஜய்யை பொலிஸ் அதிகாரியாக்குகிறார்.
ஆனால் அந்த விஜய்யே பின்னர் மோகன்லாலுக்கு எதிரியாகிறார்… அதன் பிறகு இருவருக்கும் நடக்கும் யுத்தமே க்ளைமேக்ஸ்.
“படம் சூப்பரா இருந்தது. ஒவ்வொரு காட்சியையும் இரசித்துப் பார்த்தோம். பாடல்களும், விஜய்யின் நடனமும் அருமை. பரோட்டா சூரியை பெரிய ரேஞ்சுக்கு கொண்டு சென்றுள்ளது இந்தப் படம்,” என்கிறார் விஜய்யின் இரசிகரான ஒருவர்.
ஆனால் சமூபக வலைத் தளங்களில் படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
சிலர் படத்தை ஒரு முறை பார்க்கலாம். கடைசி அரை மணி நேரத்தை இன்னும் நன்றாக எடுத்திருக்கலாம் என்று எழுதியுள்ளனர்.
விஜய் திரும்பத் திரும்ப ஏன் தெலுங்குப் பட ஸ்டைலிலேயே கதைகளைத் தேர்வு செய்கிறார் என்றும் கமெண்ட் அடித்துள்ளனர்.
















