போர்க் குற்றங்கள் தொடர்பாக ஆராய்வதற்கான அமெரிக்காவின் சிறப்புத் தூதர் ஸ்ரீபன் ராப்பின் இலங்கைப் பயணத்தின் பின்னர் கொழும்புக்கும் வோஷிங்ரனுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் முறுகல் நிலை தீவிரமடைந்துள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பில் அமெரிக்கா கடும்போக்கைக் கடைப்பிடிக்கும் என்பதற்கான சமிக்ஞை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்தே முறுகல் தீவிரமடைந்திருக்கிறது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இரணைப்பாலை என்ற இடத்துக்குச் சென்ற அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்ரீபன் ஜே.ராப் மற்றும் கொழும்புக்கான அமெரிக்கத் தூதர் மிச்சேல் சிசன் ஆகியோரின் ஒளிப்படத்தை வெளியிட்டது அமெரிக்கத் தூதரகம்.
அந்த இடம் 2009 ஜனவரியில் இராணுவத்தின் எறிகணைத் தாக்குதலில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்ட பகுதி எனத் தூதரகம் குறிப்பிட்டிருப்பது இலங்கை தொடர்பான அமெரிக்காவின் கடும் நிலைப்பாட்டின் எதிரொலி என்று கொழும்பிலுள்ள அமெரிக்க அதிகாரி ஒருவர் ஏ.எவ்.பி. செய்திச் சேவைக்குத் தெரிவித்திருக்கிறார்.
தூதரகத்தின் “டுவிட்டர்’ குறிப்பு அமெரிக்காவின் அதிகார பூர்வ நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் “டுவிட்டர்’ ஒளிப்படம் வெளியானதை அடுத்து ஆத்திரமடைந்த இலங்கை அரச அதிகாரிகள், கொழும்பு “தி ஐலன்ட்’ பத்திரிகைக்கு ஆவ ணம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
போரின்போது விடுதலைப் புலிகளின் நிலைகள் மீது கொத்துக் குண்டுகளைப் பயன்படுத்துமாறு அமெரிக்காவின் பசுபிக் பிரிவு பரிந்துரை செய்திருக்கும் தகவல் அடங்கிய ஆவணத்தையே அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
“இதற்கிடையே, போரில் உயிர் தப்பியவர்களிடம் இருந்து எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டமை மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டமை குறித்த விவரங்களை ஸ்ரீபன் ராப் கேட்டறிந்து கொண்டுள்ளார். எனவே நம்பகமான சுதந்திரமான விசாரணை ஒன்று அவசியம்” என்று அமெரிக்கத் தூதரகத்தின் பொது உறவுகள் துறைப் பணிப்பாளர் கிறிஸ் தோபர் ரீல் தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்காவின் போர்க் குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசு மறுத்துள்ளது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களைச் சுமத்துபவர்களுடன் இணைந்து இலங்கையில் நல்லிணக்க முயற்சிகளை அமெரிக்கா குழப்புகிறது என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச குற்றஞ்சாட்டியிருந்தார். ஸ்ரீபன் ராப்பிடம் இந்த விடயத்தைத் தாம் சட்டிக் காட்டியிருந்தார் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, இலங்கை வெளி விவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸை நேற்றுமுன்தினம் ராப் சந்தித்தபோது அமெரிக்காவின் நிலைப்பாடு பற்றியும் அமெரிக்கத் தூதரகத்தின் வலைத்தளப் பதிவு குறித்தும் அரசின் கடுமையான எதிர்ப்பு அவரிடம் பதிவு செய்யப்பட்டது.
இதேபோன்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகமவும் ஸ்ரீபன் ராப்பிடம் இந்த விடயம் தொடர்பில் அரசின் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தார்.
இவை எல்லாவற்றுக்கும் பின்னரும் தமது முடிவில் மாற்றம் எதுவும் இல்லை என்று தெரிவித்திருக்கும் அமெரிக்கா, கொழும்புத் தூதரகத்தின் வலைத்தளத்தில் போர்க் குற்றத்தைத் தொடர்புபடுத்தி இடப்பட்ட ஒளிப்படம் மற்றும் கருத்துக்களை நீக்க முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.
















