முன்னால் உயர் நீதிமன்ற நீதியரசரும், வடக்கின் முதலமைச்சருமான சீ.வீ விக்னேஸ்வரன் இன்று மகசீன் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகளை அல்ல சமூக விரோத கிரிமினல் குற்றச்சாட்டுக்களில் கைதாகி தடுத்து வைக்கப்பட்டு உள்ள கைதிகளையே பார்வையிட்டுள்ளதாக மகசீன் சிறைச்சாலையில் இருந்து கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன.
சிறைக் கைதிகளுடனான இன்றைய சந்திப்பில் மாகாண சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான சயந்தன் மற்றும் முதலமைச்சரின் விசேட பிரத்தியேக செயலாளர் மன்மதராசா உள்ளிட்டோர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் தைப்பொங்கலை அடுத்து தமிழ் சிறைக்கைதிகளை பார்வையிடப் போவதாக சிறைச்சாலை நிர்வாகத்திடம் முதலமைச்சரின் அலுவலகம் அனுமதி கோரி இருக்கிறது. அந்த அனுமதிக் கோரிக்கை கடிதத்தில் இந்துக் கைதிகளை பார்வையிடப் போவதாக முதலமைச்சரின் அலுவலக சிறப்புத் தேர்ச்சி பெற்ற அதிகாரிகள் அனுமதி கோரியிருக்கின்றனர். அந்த கோரிக்கைக்கு அமைவாக ஒவ்வாரு சிறைக் கூடத்தில் இருந்தும் இருவர் வீதம் தெரிவுசெய்யப்பட்ட கைதிகளை பார்வையிட சிறைச்சாலை அனுமதித்து இருக்கிறது. அதில் தமிழ் அரசியல் கைதிகள் திட்டமிட்டு நிர்வாகத்தால் தவிர்க்கப்பட்டு இருந்தனர். அவர்கள் சிலரிடம் முதலமைச்சர் கேட்டாராம் ‘நீங்கள் என்ன குற்றம் செய்தீர்கள் என ஒருவர் சொன்னாராம் கஞ்சா கடத்தியதாக மற்றவர் சொன்னாராம் தூள் கடத்தியதாக, இன்னும் ஒருவர் பாலியல் பலாத்காரம் கொலை போன்ற குற்றச்சாட்டுக்களை சொனாராம்..
தாம் கொண்டு போன 40 பொதிகளில் தம்மை சந்தித்த இந்த கைதிகளுக்கு கொடுத்தது போக மிகுதியை அரசியல் கைதிகளிடம் கொடுக்கும்படி கூறிவிட்டு முதலமைச்சர் குழு திரும்பியிருக்கிறது. அவற்றை அரசியல் கைதிகளிடம் கொண்டுபோய் சேர்த்த சிறை அதிகாரிகளிடமே அவற்றை திருப்பி அனுப்பி இருக்கிறார்கள் தமிழ் அரசியல் கைதிகள். கொடுத்த பொதிக்குள் ஒரு லட்டு, ஒரு வடை, ஒரு சராம் என்பன இருந்ததாக தெரிய வருகிறது.
இந்த நிலையில் தம்மோடு தொடர்பு கொண்ட முதலமைச்சர் அலுவலகத்திற்கு தம்மை சந்திப்பது குறித்தும், அதற்கு எவ்வாறு அனுமதி கோர வேண்டும் என்பது குறித்தும், தெளிவாக விளங்கப்படுத்தி இருந்ததாகவும், அவற்றிற்கு எல்லாம் தலையாட்டிய முதலமைச்சர் அலுவலகளம் கடைசியில் தம்மைச் சந்திப்பதை கோட்டை விட்டு, சமூக விரோத குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகி தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் 40 கைதிகளில் தெரிவு செய்யப்பட்ட சிலரை சந்தித்து தமக்கு லட்டும் வடையும் சாரமும் அனுப்பி விட்டு முதலமைச்சர் குழு திரும்பி விட்டதாக மகசீன் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் 125 தமிழ் அரசியல் கைதிகள் கவலை வெளியிட்டு உள்ளனர்.
















