தமிழ் மக்களின் உரிமை பறிப்பு; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றச்சாட்டு

tnalogo2வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் பேசும் மக்களின் ஜனநாயக உரிமைகள் படிப்படியாக விழுங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக போர் முடிந்த பின்னர் இந்த மீறல் நடவடிக்கை உச்சநிலை அடைந்துள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களும் கலந்து கொண்ட பத்திரிகையாளர் மாநாடு நேற்று முன்தினம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தச் சந்திப்பிலேயே கூட்டமைப்பு இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளது.

இந்த மாநாட்டில் கூட்டமைப்பு வெளியிடப்பட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கிழக்கில் கடற்கரைப் பகுதிகளில் கட்டப்படும் உல்லாச விடுதிகள், தமிழ் மக்களது கலாசாரச் சீரழிவுகளுக்குக் காரணமாக அமைகின்றன. இங்குள்ள வலைப் பாடுகள் வெளிமாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பான்மை இன மீனவர்களால் அதிகார முனைப்போடு கைப்பற்றப்பட்டு கைமாறிப் போகின்றன. அதனால் எமது மீனவர்களின் வாழ்வாதாரமும் சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

நிலப் பிரதேசத்தைப் பொறுத்த வரையிலே வெளிமாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பான்மையினத்தவர்களால் மேற்கொள்ளப்படும் அத்துமீறிய குடியேற்றமும் மேய்ச்சல்தரை அபகரிப்பும், புதிதாக முளைக்கும் பெளத்த விகாரைகளும் தமிழர்களின் சட்ட மற்றும் ஜனநாயக உரிமைகளை மீறுகின்றன. அத்தோடு அவர்களின் இருப்பும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

அத்துமீறிய குடியேற்றமும் மேய்ச்சல்தரை அபகரிப்பும்.
மட்டக்களப்பு, அம்பாறை, பொலனறுவை ஆகிய மாவட்ட எல்லைகளில் வெவ்வேறு பின்னணிகளோடு அத்துமீறிக் குடியேறிப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளும் வெளிமாவட்ட பெரும்பான்மையினரால் ஏழாயிரத்துக்கு மேற்பட்ட ஏக்கர் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளன.

அதனால் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்ட கால்நடைகளைப் பராமரித்து வந்த மேய்ச்சல் தரை அபகரிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் எதிர்காலத்தில் குடியேறவும் பயிர்செய்யவும் நிலமற்றவர்களாகும் நிலை ஏற்படவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள செங்கலடி,வவுணதீவு,கிரான் ஆகிய மூன்று பிரதேச செயலகப் பிரிவுகளிலுமுள்ள 11500 ஏக்கர் நிலப்பரப்பு கரும்புச் செய்கை மேற்கொள்வதற்காக இனங்காணப்பட்டுள்ளது. அவற்றில் அதிகளவான நிலம் அபகரிக்கப்பட்டுள்ளது.

புதிதாக முளைக்கும் பெளத்த விகாரைகள்
போர் முடிவுற்ற பின்னர் மட்டக்களப்பில் 7 விகாரைகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன.
விகாரையின் மணியோசை கேட்கும் தொலைவு வரை பெளத்த குடியிருப்புகளே இருக்க வேண்டும் என்ற இலங்கைப் பெளத்த பீடத்தின் கொள்கை நடை முறைப்படுத்தப்படும் நிலை ஏற்பட்டால் தமிழ் பேசும் மக்களின் இருப்பு கேள்விக்குறியாகிவிடும்.

இராணுவ முகாம்கள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் 54 இராணுவ, கடற்படை முகாம்கள் உள்ளன. அவை சுமார் 646 ஏக்கர் நிலப்பரப்பைத் தம் வசப்படுத்திக் கொண்டுள்ளன. சில இராணுவ முகாம்களின் அமைவால் அங்கிருந்த பாடசாலைகள் வசதி குறைந்த வேறிடங்களுக்கு இடம்மாற்றப்பட்டுள்ளன.

சில தனியார் வீடுகளில் புதிதா கக்காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதால் வீடுகளின் உரிமையாளர்கள் வாடகை வீடுகளில் தங்கியுள்ளனர்.

எனவே பெருபான்மை இனத்தவர்களின் நடவடிக்கைளால் தமிழ் மக்களின் எதிர்காலம், கலை, கலாசாரம், மொழி, வாழ்க்கை முறை, அரசியல் பிரதிநிதித்துவம், அரச நிர்வாகத்தில் பங்கேற்றல் ,தமதும் தமது வாழ் நிலத்தினதும் அடையாளத்தைப் பேணல் போன்ற அனைத்து அம்சங்களும் சவால் மிக்கதாக அமைந்துள்ளன – என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: ,

Leave a Reply