போர்க் குற்றங்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை தேவை; உண்மையைக் கண்டறியுமாறு அமெரிக்கா மீண்டும் வலியுறுத்து

usa-flag2இலங்கையில் நடந்த இறுதிக் கட்டப் போரின்போது மனித உரிமைகள் பாரதூரமாக மீறப்பட்டமை தொடர்பிலும் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்கள் மீறப்பட்டமை தொடர்பிலும் கொழும்பு அரசு நம்பகமான சுயாதீன விசாரணையை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

தெரிவிக்கப்படும் முறைப்பாடுகள் குறித்து சுயாதீனமானதும், நம்பகத் தன்மை கொண்டதுமான விசாரணைகளை மேற்கொள்வதற்கும் சம்பந்தப்பட்டவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும் இலங்கை அரசை ஊக்குவிக்க அமெரிக்கா முன்வந்துள்ளது என்று இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் நேற்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசு, அரசியல் தலைவர்கள், சிவில் சமூகப் பிரமுகர்கள் ஆகியோரைச் சந்திப்பதற்காகவும், வடக்கு, கிழக்கு போர் வலயங்களை நேரடியாகப் பார்வையிடுவதற்காகவும் அமெரிக்க சிறப்புத் தூதுவர் ஸ்டீபன் ஜே.ராப், ஜனவரி 6ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை இலங்கைக்கு வருகை தந்திருந்தார்.

அவரது இந்தப் பயணத்தின் போது அவர், மோதல்களின் பின்னர் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களையும் கேட்டறிந்தார். அத்துடன், நல்லிணக்கப்பாடு, நீதி, பொறுப்புக் கூறும் கடப்பாடு ஆகியவற்றில் இலங்கை மக்கள் செலுத்தி வரும் அக்கறையையும் அவதானித்தார்.

தூதுவர் ராப், தமது கலந்துரையாடல்களின்போது இறுதிப் போரின்போது இழைக்கப்பட்ட பாரதூரமான மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் ஆகியவை தொடர்பில் நேரடிச் சாட்சிகள் அளித்த தகவல்களையும் கேட்டறிந்தார்.

அவர் தமது பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய பின்னர், தனது அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளார். இதற்கிணங்க, சுயாதீனமானதும், நம்பகத்தன்மை வாய்ந்ததுமான விசாரணைகளை மேற்கொண்டு உண்மையை அறிவதற்காக அமெரிக்கா இலங்கையை ஊக்குவிக்க முன்வந்துள்ளது.

அத்துடன், சம்பந்தப்பட்டவர்கள் இனங்காணப்பட்டால், அவர்களை நீதி விசாரணைகளுக்கு உட்படுத்தவும் அமெரிக்கா இலங்கை அரசுக்கு உதவ முன்வந்துள்ளது.

இலங்கையிலுள்ள அனைத்து மக்களிடையேயும் சமாதானத்தையும், சுபீட்சத்தையும் மேம்படுத்துவதற்காக இலங்கை அரசுடன் இணைந்து செயற்பட அமெரிக்கா தொடர்ந்தும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது.

சம்பவங்கள், உரிய தீர்வுகள் குறித்து அனைத்துத் தரப்புகளும் ஓர் ஒருமித்த உடன்பாட்டுக்கு வரவேண்டும். சட்ட ஆட்சி, ஜனநாயக நிர்வாகக் கோட்பாடுகள் ஆகியவற்றை மதித்து ஒருங்கிணைந்த நாட்டை முன்னோக்கிச் செலுத்துவது அவசியமாகும் என்று அமெரிக்கா வலியுறுத்துவதாக என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags: ,

Leave a Reply