இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தமிழ் – சிங்கள மக்கள் மத்தியில் மேலும் மேலும் விரிசல்களை ஏற்படுத்துகின்றனவே தவிர, இரு தரப்புக்கும் இடையில் புரிந்துணர்வு ஏற்பட்டு வருவதாக அரசாங்கம் தெரிவிப்பது சர்வதேசத்தினை ஏமாற்றும் பொய்யான பிரச்சாரமேயென தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இன்று யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
2012ம் ஆண்டும் 2013ம் ஆண்டும் ஜெனிவாவில் இரண்டு தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டிருந்தன. அவை இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசினை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரியிருந்தன. அந்தத் தீர்மானம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் எந்த வகையான நடவடிக்கை எடுத்தது என்று பார்த்தால்,முக்கியமாக காணாமல் போனோர் தொடர்பாகவோ அல்லது அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பாகவோ அல்லது இராணுவத்தை வெளியேற்றி மக்களை மீளக்குடியேற்றுவது தொடர்பாகவோ அல்லது இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாகவோ இரண்டாண்டுகளில் இலங்கை அரசாங்கம் இவற்றில் முன்னேற்றம் எதனையும் காணவில்லை என்பது முக்கியமான ஒரு விடயமாக பார்க்கப்படுகின்றது.
இதற்கு மேலாக சென்று இலங்கை அரசாங்கம், தமிழ் – சிங்கள மக்களுக்கு இடையில் ஓர் புரிந்துணர்வு ஏற்பட்டு வருகின்றது. உலக நாடுகள் இந்தப் புரிந்துணர்வைக் குழப்பப் பார்க்கின்றன. உலக நாடுகள் எடுக்கின்ற நடவடிக்கைகள் சிங்கள – தமிழ் மக்கள் மத்தியில் இன்னமும் விரிசல்களை ஏற்படுத்தும் என்ற சாரப்பட கருத்துக்களைச் சொல்லுகின்ற விதத்தினை நாங்கள் பார்க்கின்றோம்.
ஆனால், இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் என்பது வலி. வடக்கு, கிளிநொச்சியில் முல்லைத்தீவில் கேப்பாபுலவில், மன்னாரில் திருகோணமலையில் மூதூர் போன்ற இடங்களிலெல்லாம் இன்னமும் மீள்குடியேற்றங்கள் இடம்பெறவில்லை என்பது மாத்திரமல்ல, மீள்குடியேற்றம் நடைபெறமாட்டாது என்ற நிலைப்பாட்டையே பார்க்கக் கூடியதாக இருக்கின்றது.
இரண்டு வாரங்களுக்கு முன்பாக கொடிகாமம் ஆசைப்பிள்ளை ஏற்றம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான காணியொன்றில் இராணுவத்தலைமையகம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதனுடைய கருத்து என்னவென்றால் யுத்தம் முடிந்து மேலும் மேலும் புதிய புதிய இராணுவ முகாம்கள், முக்கிய இராணுவ நிலைகள் தனிப்பட்ட மக்களினுடைய தனிப்பட்ட காணிகளில் அமைக்கப்படுகின்ற நிலைமை தொடர்கின்றது என்பதேயாகும்.
இதற்காக மக்களின் காணிகள் கபளீகரம் செய்யப்பட்டு வருகின்றன. அதேவேளை, காணாமல் போனோர் தொடர்பிலான மூன்று பேர் கொண்ட குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கென ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் கையளிக்கப்பட்டுள்ளன. இவை தொடர்பிலான எவ்வாறான விசாரணைகள் இடம்பெறப்போகின்றன என்பது தொடர்பிலான விடயங்கள் கூட தெளிவாக்கப்படவில்லை என சுரேஸ் பிரேமச் சந்திரன் சுட்டிக் காட்டியுள்ளார்.
















