ஈழத் தமிழரின் விடிவுக்கு தமிழீழம் ஒன்றே தீர்வு, அதை அடைவதற்குத் தன்மானத் தமிழர்கள் அனைவரும் இன்றைய பொங்கல் திருநாளில் சபதம் ஏற்போம் என்று அறைகூவல் விடுத்துள்ளார் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் வை.கோபாலசாமி.
“துன்ப இருளில் இன்னமும் தவிக்கும் ஈழத் தமிழர்களின் கண்ணீரைத் துடைக்க – விடியலின் வெளிச்சத்தை அவர்கள் காண, சுதந்திரத் தமிழ் ஈழம் ஒன்றே தீர்வாகும். அந்த இலக்கை அடைவதற்கு உலகெங்கும் உள்ள தன்மானத் தமிழர்கள் இந்தப் பொங்கல் திருநாளில் சபதம் ஏற்போம்” என்று அவர் அறை கூவல் விடுத்துள்ளார்.
தமிழர்களின் தைத்திருநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தேசியத் திருவிழா
உலகத்தில் மனித குலத்தின் பசி போக்கிடும் உணவு, தானியங்களை உற்பத்தி செய்யும் விவசாயிகள், இயற்கையின் அருட்கொடையான நிலத்துக்கும் பயிர் செழிக்கப் பயன்படும் உழவு மாடுகளுக்கும் நன்றி தெரிவிக்கின்ற விழா தான் தைப்பொங்கல் திருவிழாவாகும். பண்டைக் காலம் முதல் தமிழர்கள் கொண்டாடும் தேசியத் திருவிழாவாகும்.
ஈழப் படுகொலை
மனிதகுல வரலாற்றில் எந்த ஒரு தேசிய இனத்துக்கும் இழைக்கப்படாத கொடுமையும், படுகொலையும் இலங்கைத் தீவில் ஈழத்தமிழ் இனத்திற்குச் சிங்களப் பேரினவாத அரசால் இந்திய காங்கிரஸ் அரசின் துணையோடு நடத்தப்பட்டது.
துன்ப இருளில் இன்னமும் தவிக்கும் ஈழத் தமிழர்களின் கண்ணீரைத் துடைக்க – விடியலின் வெளிச்சத்தை அவர்கள் காண – சுதந்திரத் தமிழ் ஈழம் ஒன்றே தீர்வாகும். அந்த இலக்கை அடைவதற்கு உலகெங்கும் உள்ள தன்மானத் தமிழர்கள் இந்தப் பொங்கல் திருநாளில் சபதம் ஏற்போம்.
வருங்காலம் தமிழர்களுக்கு ஒளிமயமான காலமாக அமையும் என்ற நிறைந்த நம்பிக்கையுடன் தாய்த் தமிழகத்திலும், தமிழ்ஈழத்திலும், தரணி எங்கும் வாழும் தமிழர்களுக்கு நேச உணர்வுடன் இனிய பொங்கல் வாழ்த்துகளை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன் – என்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
















