புதிய கட்சி தொடங்குகிறார் அனந்தி! – ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம்

வடக்கு மாகாணசபையின் அமைச்சர் அனந்தி சசிதரன் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியொன்றை ஆரம்பிக்கவுள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சி உறுப்பினராக வடக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு அனந்தி சசிதரன் வெற்றி பெற்றிருந்தார். அக் கட்சியின் உறுப்பினராகச் செயற்பட்ட காலத்தில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதால் ஒழுக்காற்று நடவடிக்கையை கட்சி எடுத்திருந்த நிலையில் கட்சியிலிருந்து விலகியே செயற்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் மாகாண சபையில் முதல்வருக்கு எதிராக தமிழரசுக் கட்சியினர் செயறபட்ட போது முதல்வருக்கு ஆதரவாக நின்றிருந்தார். இதனால் புதிய அமைச்சரவையில் மகளிர் விவகார அமைச்சராக அவரும் நியமிக்கப்பட்டிருந்தார்.இவ்வாறான நிலையில் மாகாண சபையில் முதல்வர் அணி முதல்வருக்கு எதிரான அணி என இரு அணிகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களே பிரிந்து நின்று செயற்பட்டனர். இதனையடுத்து அடுத்த மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தனிக் கட்சி ஆரம்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

அத்தோடு அக் கட்சியில் அனந்தி சசிதரன் உள்ளிட்ட தமிழரசு கட்சி அதிருப்தியாளர்களும் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

இவ்வாறான நிலைமையில் அனந்தி சசிதரன் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பிக்க உள்ளதாகவும் அதன் ஆரம்ப நிகழ்வுகள் எதிர்வரும் 18 ஆம் திகதி யாழ் பொது நூலகத்தில் நடைபெறவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!