பிரதமர் மனதில் தொழிலதிபர்களுக்கு மட்டுமே இடமுண்டு: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி

மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் சட்டப்பேரவை ஆயுட்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நிறைவடைவதை தொடர்ந்து அம்மாநிலத்திற்கு ஒரே கட்டமாக டிசம்பர் 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால், ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள ஆளும் பாரதிய ஜனதா கட்சியும், 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் நோக்கில் காங்கிரஸ் கட்சியும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், அம்மாநிலத்தின் தாதியா என்னுமிடத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறியதாவது:- விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்யக்கோரி ஒரே ஒரு முறை மட்டும் பிரதமர் அலுவலகத்துக்குச் சென்றுள்ளேன். தொழிலதிபர்களின் கடன்களைத் தள்ளுபடி செய்வது போல் விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்யலாம் என பிரதமரிடம் வலியுறுத்தினேன். ஆனால் அது பற்றிப் பிரதமர் ஒரு சொல்கூடப் பேசவில்லை.

பெண் குழந்தைகளைக் காப்போம் எனப் பெயரளவுக்கு முழங்கும் பிரதமர், உத்தரப்பிரதேசத்தில் பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்த சட்டமன்ற உறுப்பினரைக் கட்சியில் இருந்து நீக்கவில்லை. ஒடுக்கப்பட்டோருக்கும் பெண்களுக்கும் பிரதமர் மனத்தில் இடமில்லை என்றும், தொழிலதிபர்களுக்கு மட்டுமே இடமுண்டு. தொழிலதிபர்களை சகோதரர்கள் என அழைக்கும் பிரதமர், உழவர்களையும் தொழிலாளர்களையும் சகோதரர்கள் என அழைப்பதில்லை என ராகுல்காந்தி தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!