ஒருவருக்கு அவர் அணியும் ஆடைதான் மேலதிக அழகையும் கம்பீரத்தையும் கொடுக்கின்றது என்பதில் உங்களில் யாருக்காவது சந்தேகம் இருக்கின்றதா?
அதிலும் குறிப்பாகப் பெண்களின் அழகுக்கு அழகூட்டுவது அவர்க்ள அணியும் ஆடைகளாகத்தான் இருக்கின்றன. இதைத் தெரிந்துகொண்டுதான், ஆள் பாதி ஆடை பாதி என்கிறார்கள்.
DESIGUAL என்ற ஸ்பானிய ஆடை விற்பனை நிலையத்திற்கும், இந்த ஆள் பாதி ஆடை பாதி மந்திரம் நன்றாகவே தெரிந்திருக்கின்றது என்றுதான் சொல்ல வேண்டும். வருடாவருடம், புதுவருடப் பிறப்பு கழிந்து வரும் நாட்களில் இவர்கள் ஆள் பாதி ஆடை பாதி முறையில் தமது ஆடைகளை விற்பனை செய்யும் கிலலாடிகளாக மாறி இருக்கின்றார்கள்.
இந்த முறையிலான விற்பனையை 2005ம் ஆண்டு தொடக்கம், இந்த விற்பனை நிறுவனம் வருடாவருடம் செய்து வருகின்றது.
ஆடை வாங்க வருபவர்கள், ஆள் பாதி ஆடை பாதியாக வரவேண்டும் என்பதுதான் இவர்கள் விதிக்கும் நிபந்தனை. முதல் வரும் 100 பேருக்கு இவர்கள் அளிக்கும் சலுகை என்ன தெரியுமா? வெறும் மேலாடையுடனும், கீழே உள்ளாடை மட்டுமே அணிந்து வருபவர்கள், கடைக்குள் நுழைந்து அனுமதிச் சீட்டைப் பெற்றதும், தமக்கு விருப்பமான ஆடைகளை அணிந்து, முழுமையாக வெளியே செல்லலாம்.
இந்த அரிய வாய்ப்பை விட்டு வைப்பார்களா இளவட்டங்கள்?
இந்த விநோத நிகழ்வு நடந்த இடம் இத்தாலி நகரங்களான ரோம், ரியூரின்! நிகழ்ந்த காலம் கடந்த சனிக்கிழமை (04.01.14) . விற்பனை நிலையம் காலை 8.00 மணிக்குத்தான் திறக்கப்படும்.
ஆனால் பந்தியில் முந்துபவர்களுக்குத்தான் இலை போடப்படும். விடிகாiலை 2.00 மணிக்கு காத்திருப்பு தொடங்கி விட்டது. (முன்பெல்லாம் அப்பிள் போன்களுக்கு விடிய விடியக் காத்திருந்தது போல)
ஆனால் செய்திகளின்படி, விடிகாலை 3மணிக்கு வந்தவர்களால் இலவச ஆடைக் கொள்வனவைச் செய்ய முடியவில்லை. காரணம் காத்திருந்தவர்கள் தொகை விடிகாலை 3.00 மணிக்குள் நூறைத் தாண்டிவிட்டது. ஏனையோருக்கு பல உடைகள் பாதி விலையில் விற்பனை செய்யப்பட்டன என்பது அவர்கள் மனதுக்கு ஆறுதல் அளித்த விடயம்.
இலண்டன் நகரிலும் இதே விற்பனை நிறுவனம், இதே முறையில் தனது வாடிக்கையாளர்களைக் கவரத் தவறவில்லை.
இலண்டன் நகரில், விற்பனைக்கு முதல் தினம் இரவு 11.00 மணிக்கு. காத்திருப்புகள் தொடங்கி விட்டன என்கிறது மெயில் என்ற ஆங்கிலேய சஞ்சிகை. இங்கு பிரபல்யமான REGENT`S STREET என்ற தெருவில் உள்ள இந்த விற்பனை நிலையத்தில் காத்து நின்ற 300 பேரில் 100 பேருக்கு மாத்திரமே இலவச ஆடைகளை இங்கு பெற முடிந்துள்ளது. ஏனையோருக்கு அரைவிலைச் சலுகை! இங்கே விற்பனை நிலையம் 9.00 மணிக்குத்தான் திறக்கப்பட்டுள்ளது.
காத்து நின்றவர்களில் பலர் மாணவர்கள் என்கிறது மெயில் பத்திரிகை!
அரைகுறை ஆடைகளோடு நின்று, முழுமையாக உடை அணிந்து சிரித்த முகத்தோடு நின்ற ஒரு 22வயது இளம் பெண்ணை பத்திரிகையாளர் பேட்டி கண்டிருக்கின்றார்.
விடியற்காலை 2.00 மணிக்கு இங்கு வந்துவிட்டேன். உள்ளாடைகள் மாத்திரம் அணிந்து குளிரில் நின்றது சற்று சிரமமாகத்தான் இருந்தது. என்றாலும் கிடைத்த இலவச ஆடைகள் என்னைச் சூடேற்றி விட்டன என்று கூறியிருக்கின்றார் இந்த இளம் யுவதி!
பேர்லின், ஸ்டொக்ஹோம், மட்ரிட், பிராக் போன்ற நகரங்களிலும் இந்த மாதிரியான காத்திருப்புகளும், ஆடை அன்பளிப்புகளும் அரங்கேறியிருக்கின்றன. ரோக்கியோ, நியூயோர்க் போன்ற பாரிய நகரங்களும் இந்த விநோத நிகழ்வைக் கண்டுள்ளன.
இந்த நிறுவனம் 1984இல் ஒரு சுவிஸ் நாட்டவரால் ஆரம்பிக்கப்ட்டு இருந்தாலும், இது 2002இல் ஒரு ஸ்பானியர் கைமாறியுள்ளது. இவர்கள் விற்பனை அணுகுமுறை முற்றிலும் வேறுபட்டது என்பதைப் பலரும் ஒப்புக்கொள்கின்றார்கள்.
இதுவரையில் சுமாராக ஆண்களும் பெண்களுமாக 10,000 பேர் வரையில் இந்த மாதிரியான விற்பனை நிகழ்வுகளில் பங்குபற்றியிருப்பதாக விற்பனை நிறுவனம் கூறியுள்ளது. அடுத்த வாரம் இதே நிகழ்வு பாரிஸ் நகரில் இடம்பெற உள்ளது. இங்கு வருபவர்கள் ஆள் பாதி ஆடை பாதியாக மாத்திரம் வருவதோடு நின்றுவிடாமல், இவர்க்ள நடாத்தும்; 100 மீற்றர் ஓட்டப் பந்தயத்திலும், உள்ளாடைகளோடு கலந்து கொள்ள வேண்டும் என்பது இந்த நிறுவனம் விதிக்கும் இன்னொரு நிபந்தனை!
இந்த நாகரீக உலகில், இப்படியான அநாகரீக நிகழ்வுகளுக்கு என்றுமே பஞ்சம் இருந்ததில்லை. இனி இருக்கப் போவதுமில்லை…
















