வடக்கு மீனவர்களை அழ வைக்கும் அரசு எமக்கு வேண்டாம்; மீனவர் குற்றச்சாட்டு

no1வடக்கு மீனவர்களைத் தொடர்ந்தும் சோதிக்கும் அழவைக்கும் அரசு எமக்குத் தேவையில்லை. எங்களுடைய வாழ்வாதாரம் இப்போது கேள்விக் குறியான நிலையிலேயே உள்ளது என்று வடமாகாணக் கடற்றொழிலாளர் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட பிரதிநிதி எப். ஜோசப் கண்ணீருடன் தெரிவித்தார்.

இந்திய இழுவைப் படகுகளினால் வட புலத்து மீனவர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் மற்றும் இந்தியாவில் நடைபெறும் பேச்சுக்கள் தொடர்பான ஊடக மாநாடு ஒன்று நேற்று மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ்.மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது:
எமது பிரதேசத்தில் போர் முடிந்துவிட்டது. ஆனாலும், இன்னும் சுமக்க முடியாத சுமைகளைச் சுமந்து கொண்டிருக்கின்றோம்.

சிறிய ஏரியைக் கொண்ட எமது பிரதேசத்தில் பெரிய தேசமாக உள்ள இந்தியாவில் இருந்து நுழையும் மீனவர்கள் செய்யும் அட்டகாசங்களை அட்டூழியங்களை தொடர்ந்தும் எம்மால் சுமக்க முடியாது.

நிச்சயமாக மீள் குடியமர்ந்த பின்பு எங்கள் ஆசைகள் சந்திர மண்டலத்தைவிடப் பெரியனவாக இருந்தன. எதிர்பார்த்து இருந்தோம். நாங்கள் பாதுகாப்பாகவும், நிம்மதியாகவும் இருக்கலாம் உழைக்கலாம் என்ற நம்பிக்கையுடன் இருந்தோம்.

வீடு தந்தார்கள், படகு, இயந்திரம் தந்தார்கள். வங்கியில் கடன் தந்தார்கள். எல்லாமே இப்போது ஒட்டு மொத்த சுமையாக மாறி கடனாளியாக இருக்கிறோம்.
இலங்கையில் தமிழர்களின் வாழ்வு அழிவை நோக்கியே சென்றுகொண்டிருக்கின்றது.

60 வயதைக் கடந்தும் இன்னும் அழுதுகொண்டே இருக்கின்றோம். இப்படி எங்களை அழ வைத்திருக்கும் அரசு எமக்கு வேண்டாம் என்றார்.

Tags: ,

Leave a Reply