வடக்கு மாகாண அரச அதிகாரிகளுக்கும், முதலமைச்சருக்கும் இடையில் இடை வெளியை ஏற்படுத்துவது ஊடகங்களும், முதலமைச்சருடன் உள்ள ஒரு குழுவினரும் தான் என்று முதலமைச்சருடனான நேற்றைய கூட்டத்தில் குற்றஞ்சாட்டினார் மாகாண பொதுச் சேவைகள் ஆணைக் குழுவின் செயலாளர் க.தெய்வேந்திரம்.
வடக்கு மாகாண முதலமைச்சராக க.வி.விக்னேஸ்வரன் பதவியேற்ற பின்னர் கடந்த ஐந்து மாதங்களில் முதல் தடவையாக வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்கள தலைவர்களை ஒன்றாக நேரில் சந்தித்துக் கலந்துரையாடினார்.
நிகழ்வில் ஒளிப்படம் எடுப்பதற்கு மட்டும் பத்திரிகையாளர்களுக்கு இரு நிமிடங்கள் அனுமதி வழங்கப்பட்டது. அவர்களை வெளியேற்றிவிட்டே கலந்துரையாடல் நடத்தப்பட்டது.
ஒத்துழையுங்கள்
இந்தக் கலந்துரையாடலில் அமைச்சுகளின் செயலாளர்களினால் கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட வேலைத் திட்டங்கள் தொடர்பில் முதலமைச்சருக்கு விளக்கமளிக்கப்பட்டது.
அங்கு கருத்துத் தெரிவித்த முதலமைச்சர், “நாங்கள் மக்களின் பெரும்பான்மை ஆதரவுடன் ஆட்சி அமைத்திருக்கின்றோம். எங்களுக்கு நீங்கள் ஒத்துழையுங்கள். வடக்கு மாகாண பிரதம செயலாளர் உட்பட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்” என்று கூறப்பட்டது.
முதலமைச்சருக்குப் பதிலளித்துப் பேசிய மாகாண பொதுச் சேவைகள் ஆணைக் குழுவின் செயலாளர் க.தெய்வேந்திரம், அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்குகின்றார்கள், ஊடகங்களும் முதலமைச்சருடன் உள்ள இன்னொரு குழுவினரும்தான் இடைவெளியை உருவாக்குகின்றனர் என்று தெரிவித்தார் எனவும் கூறப்பட்டது.
“உங்களுக்கும், எங்களுக்கும் இடையில் இடை வெளியை உருவாக்குவதே ஊடகங்கள்தான்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சருக்கும் அதிகாரிகளுக்கும் இடையில் ஊடகங்கள் எவ்வாறு இடைவெளியை உருவாக்குகின்றன என்று செயலாளர் கே.தெய்வேந்திரத்தைத் தொடர்புகொண்டு “உதயன்’ வினவியது. கூட்டத்தில் தான் அவ்வாறு கூறினார் என்பதை மறுக்காத அதேவேளை “கலந்துரையாடலில் நாங்கள் பல்வேறு விடயங் களைப் பேசுவோம். ஊடகங்களுக்கு அதனை தெரிவிக்க முடியாது” என்று பதிலளித்தார்.
















