மன்னார் மனிதப் புதைகுழியிலிருந்து நேற்று முழுமையான எலும்புக்கூடு ஒன்றும், துண்டாக்கப்பட்ட மண்டையோட்டின் துண்டுகளும் மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் குறித்த புதைகுழியிலிருந்து பெண்கள் கையில் அணியும் வளையல்கள் சிலவும் உடைந்த நிலையில் நேற்று மீட்கப்பட்டுள்ளன.
இதேவேளை, பெண்கள் கழுத்தில் அணியும் முத்து மாலையின் குண்டு மணிகள் சிலவும் நேற்றுக் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன என்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள விசேட நிபுணர் குழுவினர் தெரிவித்தனர்.
மன்னார் – திருக்கேதீஸ்வரம்
பகுதியில் கடந்த மாதம் 20ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனிதப் புதைகுழி நேற்று 8 ஆவது தடவையாக மன்னார் நீதிவான், விசேட நிபுணர் குழுவினர், மன்னார் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோர் முன்னிலையில் தோண்டப்பட்டது.
இதன்போது முழுமையான எலும்புக்கூடு ஒன்றும், துண்டாக்கப்பட்ட மண்டையோட்டின் துண்டுகளும் மீட்கப்பட்டுள்ளன. இந்தப் புதைகுழியிலிருந்து நேற்று வரை 37 மனித எலும்புக்கூடுகள் முழுமையாகவும், சில எலும்புக்கூடுகள் துண்டுதுண்டாகவும் மீட்கப்பட்டுள்ளன என்று மன்னார் நீதிவான் ஆனந்தி கனகரட்ணம் தெரிவித்தார்.
நேற்றுக் காலை 8.30 மணியிலிருந்து பிற்பகல் ஒரு மணி வரை புதைகுழியைத் தோண்டும் பணி இடம்பெற்றது. மீண்டும் இன்று காலையிலிருந்து குறித்த மனிதப் புதைகுழியைத் தோண்டும் பணி இடம்பெறவுள்ளது.
















