யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2 வார காலப்பகுதியில் மட்டும் 30இலட்சத்து 33ஆயிரத்து 252 ஆயிரம் ரூபா காசோலை மோசடி இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் யாழ்பாணம் பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்களால் முறைப்பாடுகள் பதியப்பட்டுள்ளன. எனினும் அதிகளவிலான காசோலை தொடர்பிலான முறைப்பாடுகள் வியாபார நோக்கில் கொடுக்கல் வாங்கல் செய்வதாகவே அமைகின்றது.
எனவே இவ்வாறு காசோலை மூலம் கொடுக்கல் வாங்கல்களைச் செய்பவர்கள் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும் எனவும் பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அதன்படி கடந்த வாரம் தொழில் வாய்ப்பினை பெற்றுத்தருவதாக கூறி 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா காசோலையினைப் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குருநகர் பகுதியைச் சேர்ந்த ஒருவரால் கடந்த 2ஆம் திகதி முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில் சந்தேகநபர் குறித்து தகவல்கள் கிடைக்கப்பெற்றும் அவர் தலைமறைவாகியுள்ளமையினால் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் வியாபார நடவடிக்கைக்காக யாழ். நகர்ப்பகுதி கடை ஒன்றில் 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலை கொடுத்து மோசடி செய்துள்ளதாக கடந்த 3ஆம் திகதி முறைப்பாடு ஒன்று பதியப்பட்டுள்ளது. எனினும் சந்தேக நபர்குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது
அதேபோல் கடந்த 7ஆம் திகதி பருத்தித்துறை வீதியில் உள்ள ஒருவரால் வியாபார நோக்கத்திற்காக 18 இலட்சம் ரூபா பெறுமதியான காசோலை மோசடி இடம்பெற்றுள்ளது. இது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மேலும் அன்றைய தினம் கொக்குவில் பகுதியில் உள்ள ஒருவரால் ஒரு இலட்சத்து 10 ஆயிரம் ரூபா காசோலை மோசடி ஒன்று இடம்பெற்றுள்ளது. இது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மேலும் யாழ்.நகர் வியாபாரி ஒருவர் 6 இலட்சத்து 23ஆயிரத்து 252 ரூபா காசோலை மோசடியினை செய்ததாக கண்டி முள்கம்பொலவை சேர்ந்த ஒருவரினால் கடந்த 10 ஆம் திகதி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளார்.
















