இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமற்போனவர்கள் தொடர்பில் சரியான தகுந்த ஆதாரங்கள் உரியவர்களால் வெளிப்படுத்தப்படுமாக இருந்தால், அவ்வாறு குற்றமிழைத்தவர்கள் தொடர்பில் விசாரிப்பதற்காகச் சுதந்திரமான விசேட சட்ட ஆணைக்குழு நிறுவப்படும் என்று காணாமற் போனோர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பராக்கிரம பரணகம தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற காணாமற்போனோர் தொடர்பான அமர்வின் முடிவில் நடத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமற் போனவர்கள் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் உங்களுக்குக் கிடைத்துள்ளன. இது தொடர்பில் இராணுவத்தினரிடம் எவ்வாறு விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்று ஊடகவியலாளர் ஒருவர் ஆணைக்குழுவின் தலைவரிடம் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த தலைவர் பராக்கிரம பரணகம, இது தொடர்பில் நாம் இராணுவத்தினரிடம் விசாரணைகளை முன்னெடுப்போம். குறித்த காலப் பகுதியில் அங்குள்ள இராணுவ முகாமில் கடமையாற்றிய அதிகாரி யார்? மற்றும் படை வீரர்கள் யார்? என்பது தொடர்பில் விசாரணைகளைச் செய்வோம்.
அத்துடன் சட்டமா அதிபர் திணைக்களத்தினரும் இது தொடர்பில் சட்டரீதியாக ஆராய்வார்கள். சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்கள் உரிய முறையில் வெளிப்படுத்தப்படு மாக இருந்தால் யார் அந்தக் குற்றத்தைச் செய்தார்கள் என்பதை அறிய முடியும்.
அவர்களுக்கு எதிராகச் சட்டமாக அதிபர் திணைக்களத்தினூடாக நடவடிக்கை எடுக்கப்படும். அத்தகைய குற்றவாளிக ளைப் பற்றி விசாரிப்பதற்காக விசேட சட்ட ஆணைக்குழு நிறுவப்படும்.
அது யாருடைய தலையீடும் இல்லாமல் சுதந்திரமாகச் செயற்படும் என்றார்.
















