மன்னார் மனிதப் புதைகுழியின் எல்லை எதுவரை உள்ளது என்பதைக் கண்டுபிடிக்க முடியாத நிலையில் உள்ளோம். புதைகுழியில் இருந்து தொடர்ச்சியாக மனித எலும்புக்கூடுகள் மட்டுமே மீட்கப்பட்டு வருகின்றன.
பெரிய அளவிலான தடயப்பொருள்கள் எவையும் இதுவரை மீட்கப்படவில்லை. இதனால் இது குறித்த விவரங்களைக் கண்டறிய நீண்ட நாள்கள் எடுக்கும் இவ்வாறு தெரிவித்துள்ளார் மன்னார் மனிதப் புதைகுழியைத் தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ள அனுராதபுரம் சட்ட வைத்திய அதிகாரி டி.எல்.வைத்தியரட்ன.
மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியைத் தோண்டும் பணி நேற்று செவ்வாய்க்கிழமை காலையும் மன்னார் நீதிவான் முன்னிலையில் இடம்பெற்றது.
அனுராதபுரம் சட்ட வைத்திய அதிகாரி டி.எல். வைத்தியரட்ன தலைமையிலான குழுவினர் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று மனித எலும்புக்கூடுகள் எவையும் முழுமையாக மீட்கப்படவில்லை. இதுவரை 40 மனித எலும்புக்கூடுகள் அங்கு முழுமையாகவும், துண்டுகளாகவும் மீட்கப்பட்டுள்ளன.
மன்னார் நீதிவானின் உத்தவுக்கமைவாக நேற்று முன்தினம் திங்கள்கிழமையும் நேற்றுச் செவ்வாய்க்கிழமையும் குறித்த பகுதியில் உள்ள வீதி உடைக்கப்பட்டுத் தோண்டும் பணி இடம்பெற்றது.
நேற்றுப் புதிதாகத் தோண்டப்பட்ட பகுதியில் மனித எலும்புத் துண்டுகள் சில கண்டுபிடிக்கப்பட்டன.நேற்றுப் பிற்பகல் 2 மணியுடன் பணிகள் இடைநிறுத்தப்பட்டன. இன்று புதன்கிழமை மன்னார் நீதிவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் புதைகுழி மீண்டும் தோண்டப்படும்.
அனுராதபுரம் சட்ட வைத்திய அதிகாரி டி.எல்.வைத்தியரட்ன தெரிவிக்கையில், மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்டுவரும் மனித எலும்புக்கூடுகள் தொடர்பில் மரணம் சம்பவித்த விதத்தை அறிந்துகொள்ள நீண்ட நாள்கள் எடுக்கும்.
குறித்த புதை குழியின் எல்லை எதுவரை உள்ளது என்பதைக் கண்டுபிடிக்க முடியாத நிலையில் உள்ளோம் என்று கூறினார்.
















