தமிழர் உரிமையைப் பெற இராஜதந்திரப் போராட்டம்; செல்வராசா எம்.பி. தெரிவிப்பு

selvarasaஅன்று அகிம்சைப்போராட்டம் என்றும் பின்னர் ஆயுதப் போராட்டம் என்றும் பலபோராட்ட வடிவங்களை தமிழ் மக்கள் சந்தித்தனர். ஆனால் இன்று நாம் தமிழரின் உரிமைகளைப் பெற எமது தமிழ்த்தேசியத் தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தலைமையில் இராஜதந்திரப் போராட்டத்தை சர்வதேசத்தின் அங்கீகாரத்தைப் பெறுவதற்காக மேற்கொண்டு வருகின்றோம்.

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.

சிக்கனகடனுதவி கூட்டுறவுச் சங்கம் நடத்திய வருடாந்த பரிசளிப்பு விழா குருமண்வெளி, 12ஆம் வட்டாரத்தின் சக்தி சிக்கன சேமிப்பு கடனுதவி சங்க மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:

எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐ.நா. சபை அமர்வானது மூன்றாவது தடவையாக இடம்பெறப்போகின்ற ஒன்றாகும். இரண்டு தடவைகளில் தமிழர்களுக்காக சர்வதேசம் குரல் கொடுத்து இருப்பதோடு பல தீர்மானங்களையும் நிறைவேற்றி இருக்கின்றது.

இதேபோன்று மூன்றாவது தடவையாகவும் குரல்கொடுக்க இருக்கின்றார்கள். அதிலும் எமக்கு வெற்றி நிச்சயம் கிடைக்கும். எமது போராட்டத்தின் வடிவங்கள் அகிம்சை என்றும் ஆயுதப் போராட்டம் என்றும் பல கோணங்களில் சென்று இன்று சர்வதேச மயப்படுத்தப்பட்ட இராஜதந்திரப் போராட்டமாக மாற்றம்பெற்றுள்ளது.

இதில் நாம் அனைவரும் பொறுமைகாக்கவேண்டியது கட்டாயமாகும். இந்த நாடு சிங்கள மக்களுக்கு மாத்திரம் சொந்தமானதல்ல. இது அனைத்து இனங்களுக்கும் சொந்தமான நாடு. இது சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என பலதரப்பட்டோருக்கு சொந்தமான நாடு.

அந்த வகையில் நாம் நிதானமாகச் சிந்தித்து எமது உரிமைகளைப் பெறுவதற்கு முயற்சிக்கவேண்டும். அப்போதுதான் அந்த உரிமை நிரந்தரமானதாக அமையும்.

எங்களுடைய அபிலாசைகளை வென்றெடுப்பதற்கு அனைவரும் அயராது பாடுபட வேண்டும். அப்போதுதான் அதனை இலகுவாகப் பெற்றுக் கொள்ள முடியும். எமது போராட்டம் முடிந்து விடவில்லை. நாங்கள் தொடர்ந்தும் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். அப்போதுதான் முழுமையான சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த நாடு பல்லின சமூகம் வாழும் ஒரு நாடாகும். இதனால் கல்வியில் போட்டித் தன்மை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. அதனால் எமது சமூகமும் கல்வியில் போட்டி போட்டு தமது கல்வியைத் தொடர்ந்தால் மாத்திரமே எதிர்காலச்சவால்களுக்கு ஏற்றாற்போல் போட்டி உலகில் வாழமுடியும் – என்றார்.

எமது போராட்டம் முடிந்து விடவில்லை. நாங்கள் இன்னமும் பொறுமையைக் கடைப் பிடித்தால் முழுமையான சுதந்திரத்தைப் பெறலாம்.

Tags: ,

Leave a Reply