கடத்தியவர்களே குற்றவாளிகள்; ஜனாதிபதி ஆணைக்குழு நேற்றுத் தெரிவிப்பு

Mahinda5காணாமற்போனவர்களை அவர்களின் விருப்பத்துக்கு மாறாகக் கடத்தியவர்கள்தான் குற்றவாளிகள். அவர்களுக்குத் தண்டனை வழங்குவதற்குச் சட்டமா அதிபர் திணைக்களத்தினூடாக நடவடிக்கை மேற்கொள்வதற்கு ஆணைக்குழு பரிந்துரைக்கும் என்று காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக் குழுவினர் நேற்றுத் தெரிவித்தனர்.

தமது பிள்ளைகளை விடுதலைப் புலிகள் கட்டாயப்படுத்திக் கொண்டு சென்றதாகவும் அதன் பின்னர் அவர்கள் இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமற்போனதாகவும் பெற்றோர் சிலர் விசாரணையில் தெரிவித்தனர்.

இது குறித்துக் கருத்து வெளியிடும்போதே ஆணைக்குழுவினர் மேற்கண்டவாறு கூறினர்.
ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பராக்கிரம பரணகம, ஆணையாளர்களான மனோ ராமநாதன், சுரஞ்சனி விஜயவர்த்தன ஆகியோர், கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நேற்றுச் சாட்சியங்களைப் பதிவு செய்தனர். அதன் பின்னர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

விருப்பத்துக்கு மாறாக கொண்டு செல்லப்பட்டனரா?
காணாமற்போனவர்கள் என்று சொல்லப்படும்பொழுது, அவர்களின் விருப்பத்துக்கு மாறாகக் கொண்டு செல்லப்பட்டவர்கள் ஒரு தொகுதியினர் இருக்கின்றனர்.

அவர்களின் விருப்பத்துக்கு மாறாக யார் கொண்டு சென்றார்களோ அவர்களுக்கு உரிய தண்டனையை சட்டமா அதிபர் திணைக்களத்தினூடாக பெற்றுக் கொடுப்பதற்குப் பரிந்துரைக்கப்படும்.

இன்னொரு வகையினர், அவர்களின் காணமற்போன உறவினர்களைத் தேட முடியும் என்றால் தேடிக் கொடுப்போம். அவர்கள் இல்லையென்று எம்மால் உறுதியாக நிரூபிக்க முடிந்தால் அவர்களுக்குரிய நட்டஈடுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று ஆணைக்குழுவினர் அங்கு குறிப்பிட்டனர்.

ஒரு சில சாட்சியங்கள், தமது பிள்ளைகளை விடுதலைப் புலிகள் கட்டாயப்படுத்திக் கொண்டு சென்றதாகவும் அதன் பின்னர் அவர்கள் இராணுவத்தினரிடம் சரணடைந்து காணமற்போனதாகவும் தெரிவித்துள்ளனர்.

அப்படியாயின் கடத்தியவர்களா? அல்லது காணாமற் போகச்செய்தவர்களா குற்றவாளி என்று ஊடகவியலாளர்களால் கேள்வியெழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த ஆணைக் குழுவினர், கடத்தியவர்கள் தான் குற்றவாளிகள். அந்தக் குற்றவாளிகள் யார் என்று விசாரணை செய்து சட்ட நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்படும்.

ஆணைக் குழுவுக்குச் சட்டபூர்வமாகத் தண்டிக்கும் அதிகாரம் இல்லை. யாரைத் தண்டிக்கவேண்டுமோ அவர்களை உரிய சட்ட ஒழுங்குக்கு உட்படுத்தி நீதித்துறை ஊடாகத் தண்டனை வழங்கப்படும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்குப் பரிந்துரைப்பதற்கு மாத்திரமே எங்களுக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது – என்றனர்.

Tags: ,

Leave a Reply