மன்னாரில் மனிதப் புதைகுழி மீட்கப்படும் பிரதேசம் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலேயே இருந்ததாகவும், அந்தப் புதைகுழிக்கும் படையினருக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்றும் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயாரட் நாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை நடை பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியிலிருந்து கடந்த மாதம் 20 ஆம் திகதி முதல் மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டு வருகின்றன.
இதுவரை 43 மனித எலும்புக் கூடுகள் மீட் கப்பட்டுள்ளன. குறித்த பிரதேசம் 1990 ஆம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும் அதன் பின்னர் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் அறிவிக்கப்படாத உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து வந்ததாகவும் மன்னார் மாவட்டத்தின் முக்கிய பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறானதொரு நிலையில் இராணுவத் தளபதி அந்தக் குற்றச்சாட்டுக்களை மறுக்கும் விதமாகப் பதிலளித்துள்ளார். இது குறித்து மேலும் கருத்து வெளியிட்டுள்ள தளபதி, இந்தச் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்குப் பூரண ஆதரவளிக்கப்படும் என்றார்.
















