யாழ்.போதனா வைத்தியசாலையில் கஞ்சா போதைப் பொருள் புகைத்துக் கொண்டிருந்த வைத்தியசாலைப் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் உட்பட 2 பேரை வைத்தியசாலை பதில் பணிப்பாளர் மற்றும் பொலிஸார் இணைந்து நேற்றுமுன்தினம் இரவு கையும் மெய்யுமாகப் பிடித்தனர்.
பல மாதங்களாக இந்தச் சம்பவம் தொடர்ந்து கொண்டிருந்த நிலையில் நேற்றுமுன்தினமே இவர்கள் கையும் மெய்யுமாகப் பிடிபட்டனர் என்று வைத்தியசாலைத் தரப்பினர் தெரிவித்தனர்.
கொழும்பைத் தலைமையகமாகக் கொண்டியங்கும் நிறுவனம் ஒன்றைச் சேர்ந்தவர்களே வைத்தியசாலையில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்ட திருகோணமலையைச் சேர்ந்த ஒருவரும் (இவர் சில வாரங்களுக்கு முன்னர் தான் கடமையேற்றார்) வைத்தியசாலையுடன் தொடர்புபட்டிராத ஒருவருமே வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டடத்தின் மொட்டை மாடியில் அமர்ந்து கஞ்சா புகைத்துக் கொண்டிருந்த போது பிடிபட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இருவரிடமும் பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர். பல மாதங்களாக இந்தச் செயற்பாடு இடம்பெற்று வந்த நிலையில் அது தொடர்பில் கிடைத்த தகவலின்படி நேற்று முன்தினம் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு கஞ்சா போதைப் பொருளை விநியோகித்து வந்தவர்கள் யார் என்பது உள்ளிட்ட விடயங்கள் விசாரணையின் முலமே தெரியவரும் என்று மேலும் தெரிவிக்கப்பட்டது.
















