அதிகாரங்களை எப்பொழுது தனிப்பட்டவர்கள் அல்லது குடும்பங்கள் அல்லது கட்சிகள் அல்லது இராணுவம் தம்வசப்படுத்த எத்தனிக்கின்றனவோ அது ஈற்றில் கவலையையே அவர்களுக்கு உண்டாக்கும்.
அண்மைக் காலத்தில் அவ்வாறு சர்வாதிகாரிகளாக மாறிய பலர் இறுதியில் தமது தவறுகளை உணர்ந்து திருந்திய வரலாறுகளும் உள்ளன.
தமிழ் மக்களை இன ரீதியாக படுகொலைக்கு ஆளாக்கிய அரசு என்று அகில உலகமும் கூறும் போது ஜனாதிபதி கடும் போக்கைக் கடைப்பிடிப்பது தவறானது ஆகும். இவ்வாறு தெரிவித்துள்ளார் வடக்குமாகாண சபை முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்.
வலி.தெற்குப் பிரதேச சபையின் உள்ளூராட்சி வார பரிசளிப்பு நிகழ்வு நேற்று பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட முதலமைச்சர் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்துள்ளதாவது:
பலவித பணிகளுக்கிடையில் இந்த விழாவில் கலந்துகொள்வதற்கு காரணம் உண்டு. நீங்கள் உள்ளூராட்சி வாரம் கொண்டாடும் போது உள்ளூராட்சி அமைச்சர் என்ற முறையில் நான் கலந்துகொள்வது வழமை.
எமக்கு அதிகாரங்கள் இல்லை என்று நாமே கூறுவதால் எந்த நன்மையும் கிடைத்துவிடாது. கிடைத்திருக்கும் அதிகாரங்களையும் தடைகளையும் கருத்தில் எடுத்துக்கொண்டு நாம் முடியுமானவரை முன்னேற வேண்டும்.
இந்த வருடம் மார்ச் மாதத்தில் சர்வதேச ரீதியாக கேள்விக்குட்படுத்தப் போகும் இலங்கை அரசு, அடுத்த தேர்தலை மட்டும் மனதிற்கொண்டு பிழையான வழியில் போய்க்கொண்டிருக்கிறது. இது எம்மைப் பொறுத்தவரையில் சட்டத்துக்குப் புறம்பான நடைமுறையாகவே கருத முடியும்.
ஜனாதிபதி எமக்கு அளித்த வாக்குறுதிகள் பலவற்றை செயற்படுத்தவில்லை. அதற்கு மாறாகவே செயற்பட்டு வருகிறார். எனினும் இது அவருக்கே ஆபத்துக்களை கொடுக்கும்.
13ஆவது திருத்தம் ஒன்றுக்கும் உதவாதது. ஒரு கையால் கொடுப்பதுபோல் கொடுத்து மறு கையால் திருப்பி எடுக்கும் தன்மை வாய்ந்தது என்று நாம் தேர்தலில் கூறியதை ஜனாதிபதி தற்போது சர்வதேசத்துக்குத் தெளிவுபடுத்தி வருகிறார்.
இதுவே அவருக்கும் அரசுக்கும் ஏற்பட்டுள்ள பெரும் பாதிப்பு. அதுவும் இனப்படு கொலைகளில் இலங்கை அரசு ஈடுபட்டது என்ற அவச்சொல்லுக்கு ஜெனிவாவில் முகம் கொடுத்து வரும் ஜனாதிபதி, தமிழ் மக்களுக்கு சட்டப்படி கொடுக்க வேண்டிய சொற்ப சலுகைகளையும் மறுப்பதால் அவரே இந்தக் குற்றச்சாட்டுகளை நிரூபிப்பது போல் அமைந்துள்ளது.
அதிகார நடைமுறைகள் இப்போது வெற்றிக்குரியனவாக இருந்தாலும் எதிர் காலத்தில் ஆபத்துக்களையே தரும் – என்றார்.
















