தென் ஆபிரிக்க முன்னாள் தலைவர் நெல்சன் மண்டேலாவின் மறைவையொட்டி நிர்மாணிக்கப்பட்ட 30 அடி உயரமான வெண்கல சிலையின் காதுப் பகுதியில் முயல் வடிவ உருவம் இரகசியமாக செதுக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த உருவச்சிலையின் காதிலுள்ள முயல் உருவை அகற்றுமாறு தென் ஆபிரிக்க அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
மேற்படி வெண்கல சிலையை வடிவமைத்தவர்கள் அந்த முயல் உருவை தமது வர்த்தக அடையாளமாக சிலையின் காதுப் பகுதியில் மறைவாக செதுக்கியுள்ளனர்.
முயல் என்பது ஆபிரிக்க மொழியில் விரைவு என்பதைக் குறிக்கும் வகையில் ஹாஸ் என அழைக்கப்படுகிறது.
இது தொடர்பில் தென் ஆபிரிக்க கலை கலாசார திணைக்களத்தைச் சேர்ந்த பேச்சாளர் மொகொமொட்ஸி மொகொடிறி விபரிக்கையில், “இது சரியான செயற்பாடு என நாம் கருதவில்லை. ஏனெனில் நெல்சன் மண்டேலா ஒருபோதும் தனது காதினுள் முயலோன்றைக் கொண்டிருக்கவில்லை” எனத் தெரிவித்தார்.
“நாம் இந்த சிலையை மக்கள் நம்பிக்கையின் ஓர் அடையாளமாக காணவேண்டும் என விரும்புகிறோம். அவர்கள் முயல் போன்ற ஏதாவதாக கருதுவதை நாம் விரும்பவில்லை” என அவர் கூறினார்.
மேற்படி வெண்கல சிலையானது நெல்சன் மண்டேலாவின் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டதற்கு மறுநாள் தலைநகர் பிரெட்டேரியாவிலுள்ள அரசாங்க தலைமையகமான யூனியன் கட்டடத்தில் ஸ்தாபிக்கப்பட்டது.
















