ஜெனிவாச் சமரை எதிர்கொள்ள அரசு பல வழிகளிலும் வியூகம்

un-flagஜெனிவா இராஜதந்திரச் சமரை எதிர்கொள்வதற்கு இலங்கை அரசு பல்வேறு நடவடிக்கை களை மேற்கொண்டு வருகின்றது. இதன் அடுத்த கட்ட நடவடிக்கையாக இலங்கை அமைச்சர்கள் பலரும் வெளிநாடுகளுக்குச் சென்று, போரின் பின்னரான களநிலைமைகள் தொடர்பில் உண்மையை விளக்கவுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

அமைச்சர்கள் பலரும் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். இன்னும் பல அமைச்சர்கள் அடுத்து வரும் சில நாள்களில் பயணங்கள் மேற்கொள்வார்கள். போருக்குப் பிந்திய இலங்கையின் நிலை குறித்த உண்மையான களநிலைவரத்தை வெளிநாட்டு அரசுகளுக்கு விளக்குவதே இந்தப் பயணங்களின் நோக்கம் என்று மூத்த அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசுக்கு எதிராகக் கடந்த 2012, 2013 ஆம் ஆண் டுகளில் ஐ.நா மனித உரிமை கள் சபையில் அமெரிக்கா வினால் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தன. இந்த நிலையில் இந்த ஆண்டும் மனித உரிமைகள் சபையில் இலங்கை அரசுக்கு எதிராகப் பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வருடம் பிரேரணை மிகக் கடுமையானதாக இருக்கும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளமையினால், அதனை எதிர்கொள்வதற்கு இலங்கை அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையைச் சந்தித்துள்ளதுடன், ஐ.நா மனித உரிமைகள் சபையின் உறுப்பு நாடுகளையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், இந்த மாதக் கடைசியில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதன் அடுத்த கட்டமாக அமைச்சர்கள், அடுத்து வரும் சில நாள்களில் பயணங்கள் மேற்கொள்ளவுள்ளார்கள் என்று தெரிவித்துள்ள அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, போருக்குப் பிந்திய இலங்கையின் நிலை குறித்த உண்மையான கள நிலைவரத்தை வெளிநாட்டு அரசுகளுக்கு அவர்கள் விளக்குவார்கள் எனவும் குறிப்பிட்டார்.

அண்மைய வெளிநாட்டுப் பயணங்களின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஏனைய நாட்டுத் தலைவர்களுக்கு, போருக்குப் பின்னரான இலங்கையின் முன்னேற்றங்களை எடுத்து உரைத்து உள்ளார் என்றும், ஏனைய அமைச்சர்களும் நாடுகள் தோறும் இலங்கையின் நல்லிணக்க முனைப்புக்கள் தொடர்பில் விளக்கவுள்ளனர் என்றும் அமைச்சர் மைத்திரிபால குறிப்பிட்டார்.

இதேவேளை இலங்கை அரசுக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை முன் வைப்பவர்கள், புலிகளின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஒரு வார்த்தை கூடச் சொல்லுவதில்லை என்றும் அமைச்சர் குற்றம்சாட்டினார்.

மேல் மற்றும் தென்மாகாண தேர்தல்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மக்கள் செல்வாக்கை ஜெனிவாவுக்கு காட்டுவதற்காக நடத்தப்படவில்லை. மாறாக இந்தச் சபைகளின் காலம் முடிகின்றது. எனவே தேர்தல் நடத்தப்படுகின்றது – என்றார் அமைச்சர்.

Tags: ,

Leave a Reply