வடக்கு, கிழக்கு மாகாணத்தின் இணைப்புக் கிராமமாகவுள்ள தென்னமரவாடியில், தமிழ் மக்களின் வயல் நிலங்களை பெரும்பான்மையின மக்கள் அபகரித்து வைத்துக் கொண்டு, அந்த நிலங்களை தமிழ் மக்களுக்கே குத்தகைக்கு விடுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலக பிரிவினுள் அமைந்துள்ள மேற்படி கிராமத்தில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்பட்டு பெரும்பான்மையின மக்கள் அதனைப் பயன்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
1984 ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் அங்குள்ள மக்கள் தமது வயல் நிலங்களில் விவசாயம் செய்து அறுவடை செய்ய குறுகிய காலம் இருந்த போது, அப்போது ஏற்பட்ட கலவரத்தால் இடம்பெயர்ந்த மக்கள் தற்போது மீளக்குடியேறியுள்ள நிலையில் அவர்களின் பூர்வீக நிலங்கள் பல சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
இடப்பெயர்வுக்கு திணிப்பு
தற்போதும் சிறுகடல், வயல் நிலங்கள், தோட்டக் காணிகள் என்று அனைத்து வகை வாழ்வாதார வழிகளும் முடக்கப்பட்டு நுட்பமான முறையில் இடப்பெயர்வு அவசிய நிலைக்குள் திணிக்கப்பட்டு வருவதாக அந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஊர்காவற்படையினரால் அபகரிக்கப்பட்ட 22 ஏக்கர் நிலத்தில் பயிர்ச்செய்கை இடம்பெறுகிறது. பனிக்க வயல் குளம் என்ற சிறியகுளம் சுமார் 45 ஏக்கர் தமிழ் மக்களின் நிலத்துக்கு விவசாயம் செய்ய உதவியது.
ஆனால் தற்போது அந்தக் குளத்தை மூடி பெரும்பான் மையின மக்களால் விவசாயம் செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கொல்லவெளி, பெருமாள் பிலவு, துவரமுறிப்பு, நல்ல தண்ணி ஊத்துப்பிலவு ஆகிய பகுதிகளில் சுமார் 300 ஏக்கர் நிலம் அபகரிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியில் 240 ஏக்கர் வயல் நிலத்தில் 120 ஏக்கர் நிலப்பரப்புக்கான அனுமதிப் பத்திரம், 1975 ஆம் ஆண்டு 60 பேருக்கு வழங்கப்பட்டது. அந்த அனுமதிப் பத்திரத்தை தாங்கள் வைத்துள்ள நிலையில் பெரும்பான்மையின மக்கள் அதில் அத்துமீறி தொழில் செய்வதாக அந்தப் பகுதியில் மீளக் குடியமர்ந்துள்ள தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.
அவர்களிடத்தில் சென்று வயல் நிலம் எங்களுக்குரியது என்று தெரிவித்தால், குத்தகைக்கு எங்கள் காணியையே தருவதாகச் சொல்கின்றார்கள் என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த மக்களின் பாதிப்புக்கள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்பட்டு பெரும்பான்மையின மக்கள் அதனை பயன்படுத்தி வருகின்றனர்.
















