ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுத கதைதான்; ஐரோப்பிய நாடுகளைச் சாடுகிறார் ஜனாதிபதி

Mahinda-Rajapaksa1“இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் ஐரோப்பிய நாடுகள் பேசுவதானது, ஆடு நனைகின்றது என்று ஓநாய் அழுத கதைக்கு ஒப்பானது”. இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்த நாட்டின் அனைத்துச் சமூகங்களும் கடந்த காலத்தில் எவ்வளவு மோசமான பாதிப்புக்களை எதிர்கொண்டன என்பதைப் பற்றிய அறிவில்லாமல் ஐரோப்பிய நாடுகள் மனித உரிமைகளைப் பற்றிக் கதைப்பதாக அவர் தெரிவித்தார்.

கொழும்பு, இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் வருடாந்தப் பரிசளிப்பு விழா, பாடசாலை அதிபர் லெப்டினன்ட் கேணல் கோதை நகுலராஜா தலைமையில் இடம்பெற்றது. இந்தக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து ஜனாதிபதி ஒருவர் பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டமை இதுவே முதற் தடவையாகும். நாட்டை நிர்மூலமாக்க அனுமதியாதீர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, தாய் நாட்டின் மீது அன்பு செலுத்துங்கள் என்று அங்குள்ள மாணவர்களிடம் கேட்டுக் கொண்டதுடன், தாய் நாட்டை நிர்மூலமாக்க யாரையும் அனுமதிக்க வேண்டாம் எனவும் தெரிவித்தார்.

வடக்கு, தெற்கில் கடந்த காலங் களில் சிறுவர்கள் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுத்தார்கள். அவர்களது அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டிருந்தன. வடக்கு, கிழக்கில் சிறுவர்கள் பயங்கரவாத நடவடிக் கையில் ஈடுபடக் கட்டாயப்படுத்தப்பட்டிருந்தனர்.

பணம் வைத்திருந்தவர்கள் தங்களது பண பலத்தைக் கொண்டு தாய்நாட்டை விட்டு வெளியேறினர் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, வடக்கு, கிழக்கினுள் உள்நுழைவதற்கு பயங்கரவாதிகள் எவரையும் அனுமதிக்கப் போவதில்லை எனத் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் போர்க் காலத்தில் தமிழ் மக்களும் துன்பங்களை அனுபவித்தனர். வடக்கில் உரிமை வழங்கப்பட்டுள்ளது. இன்று வடக்கிலுள்ள சிறுவர்களது உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டு, அவர்களுக்கான கல்வி வாய்ப்புக்களும் வழங்கப்பட்டுள்ளன. கடந்த வருடம் பல்கலைக்கழகத்துக்கு வடக்கிலிருந்தே அதிகளவானோர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள் என்பதையும் ஜனாதிபதி இதன் போது குறிப்பிட்டார்.

இந்தப் பாடசாலையின் பெயர் வரக் காரணமான, சேர் பொன்.னம்பலம் இராமநாதன், சிங்கள மக்களது உரிமைக்காகவும் பாடுபட்ட ஒருவர். வெசாக் பூரணை தினத்தை பொது விடுமுறையாக அறிவிப்பதற்காக போராடியவர் அவர் என்பதையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

Tags: , ,

Leave a Reply